மதுரையில் உள்ள சட்டப்பேரவை தொகுதிகளில் மக்கள் நீதி மய்யம் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அவனியாபுரம் பகுதியில் கமல் ஹாசன் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், "எங்களது வேட்பாளர்கள் சேவை செய்ய வேண்டும் என்பதற்காகவே அரசியல் களத்திற்கு வந்துள்ளனர். எங்களோடு நிற்பவர்களுக்கு வேறு தொழில்கள் உள்ளன. அரசியலை தொழிலாய் அவர்கள் நினைக்கமாட்டார்கள். மக்களுக்கான கடமையை செய்ய இங்கே வந்துள்ளனர்.
அதுபோலவே, நானும் எனது எஞ்சிய வாழ்நாள்களை தமிழ்நாட்டு மக்களுக்காக செலவழிக்க வந்துள்ளேன். இங்கு கூடியிருக்கும் இந்தக் கூட்டம் காசு கொடுத்து சேர்ந்தது இல்லை. அந்தந்த பகுதிகளில் உள்ள முக்கியமான பிரச்னைகள் அனைத்துக்கும் தீர்வு காணப்படும். வீரத்தின் உச்சக்கட்டம் அகிம்சை. நல்லதைத் தொடர்ந்து செய்வது எங்களின் கடமை. ஊழலுக்கு மாற்று இன்னொரு ஊழல் கட்சி அல்ல. தமிழ்நாடு நிச்சயம் சீரமைக்கப்படும்" என்றார்.