மதுரை காமராசர் பல்கலைக்கழகம் சார்பாக தமிழ் பேரவைச்செம்மல் விருது வழங்கும் விழா அந்தப் பல்கலைக்கழகத்தின் டாக்டர் அப்துல் கலாம் அரங்கில் நடைபெற்றது. இதில் குன்றக்குடி அடிகளார், தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.
தமிழ் பேரவைச் செம்மல் என்ற பெயரிலான விருது தங்கப்பதக்கம் பொற்கிழி உள்ளிட்டவற்றை பேராசிரியர் முருகரத்தினம், பேராசிரியர் சிற்பி பாலசுப்பிரமணியம், பேராசிரியர் பாலசுப்பிரமணியன், பேராசிரியர் மோகன், பேராசிரியர் திருமலை ஆகியோருக்கு வழங்கப்பட்டன.
இந்த விருதினை வழங்கி பேசிய பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன், ”2009ஆம் ஆண்டிற்குப் பிறகு தற்போதுதான் தமிழ் பேரவைச் செம்மல் விருது வழங்கப்படுகிறது. இதுவரை விருது வழங்கப்படாதது வேதனை அளிக்கிறது. தமிழ்நாடு அரசால் ஏற்படுத்தப்பட்ட இந்த விருது தமிழறிஞர்களுக்கு வழங்கப்பட வேண்டும். அவ்வாறு வழங்கப்படவில்லை என்றால் அது தமிழ்நாடு அரசுக்கு செய்யும் மிகப்பெரிய அவமரியாதை.
பல்கலைக்கழக பொறுப்பிற்கு நான் வந்த பிறகு இந்த விருதினை வழங்குவதற்கு தமிழ் ஒப்பியல் துறையை அணுகியிருந்தேன். இந்த விருதுக்காக ஏறக்குறைய 64 தமிழர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன. பல்வேறு துறை சார்ந்த தேர்வுக்குழு அமைக்கப்பட்டு அவர்கள் மூலமாகவே ஐந்து தமிழ் பேராசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர்” என்றார்.