தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய தொழிற்பேட்டையான மதுரை கப்பலூர் தொழிற்பேட்டை தற்போது ஒரு குட்டி காடாகவே காட்சியளிக்கிறது. பார்க்கும் இடமெல்லாம் பச்சை நிறம்தான். சுமார் 530 ஏக்கர் பரப்பளவில் விரிந்து காணப்படும் இந்த தொழிற்பேட்டையில் பல்வேறு வகையான தொழில் கூடங்கள் இயங்கி வருகின்றன. இவற்றிலிருந்து வெளியேற்றப்படும் மாசுக்களை குறைப்பதற்காக எடுக்கப்பட்ட சிறிய முயற்சிதான் அடர் வனமாக படர்ந்து காணப்படுகிறது.
தொழிற்பேட்டை தொழில் அதிபர்கள் சங்கமும் ரோட்டரி அமைப்பும் இணைந்து இங்கே மியாவாக்கி காடுகளை உருவாக்க திட்டமிட்டது. கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் வெறும் 40 சென்ட்டில் 28 வகையான மரக்கன்றுகள் நடப்பட்டன. தற்போது எட்டு மாதங்களே ஆன நிலையில் ஒவ்வொரு மரமும் சற்று ஏறக்குறைய பத்து அடிக்கு மேலாக வளர்ந்து நிற்கிறது.
கொத்து கொத்தாக பழங்கள்.. கொஞ்சி விளையாடும் பறவைகள்..
இதுகுறித்து பேசிய கப்பலூர் தொழிற்பேட்டையின் தொழில் அதிபர்கள் சங்க தலைவர் ரகுநாத ராஜா, "கிரீன் கப்பலூர் என்ற திட்டத்தின் மூலம் முதல் கட்டமாக ஆறு லட்ச ரூபாய் செலவில் 40 சென்ட்டில் 28 வகையான 4 ஆயிரம் மரங்களை நட்டோம். தற்போது ஏறக்குறைய எட்டு மாதங்களில் 15 அடி மரங்களைக் கொண்ட அடர்ந்த காடாக இது உருவாகியுள்ளது. பப்பாளி, வாழை போன்றவற்றில் காய்கள் கொத்து கொத்தாக காய்க்கத் தொடங்கி விட்டன. இந்த இடத்திற்குள் நுழையும்போதே இதமான தட்ப வெப்பத்தை உணர முடிகிறது.
தென்னிந்தியாவிலேயே முதல் முறையாக நான்கு ஏக்கரில் மியாவாக்கி அடர்வனத்தை உருவாக்கி வெற்றியையும் கண்டுள்ளோம். தற்போது 40 வகையான 60 ஆயிரம் மரங்கள் நடப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. கரியமில வாயுவின் வெளியேற்றம் கட்டுக்குள் வரும். ஆக்சிஜன் அளவு உயரும் என எதிர்பார்க்கிறோம். பறவைகளின் வருகை மிகப்பெரும் அளவில் தற்போது அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. ரோட்டரி இன்டர்நேஷனல் பங்கேற்பும் ஆலோசனையும் எங்களுக்குப் பெரும் உற்சாகத்தைத் தருகிறது" என்று மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார்.
மா, பப்பாளி, வாழை, புங்கை, பூவரசு, தேக்கு, அத்தி, ஆலமரம் என சுற்றி பார்க்கும் போதே கண்ணுக்கு குளிர்ச்சியாக காட்சியளிக்கும் இந்த வளாகத்தில் மலர் கொடிகளும் விடுவிடென வளர்ந்து வருகின்றன. வேலையாட்களை வைத்து களையெடுத்தல், தண்ணீர் பாய்ச்சுதல் உள்ளிட்ட பணிகளும் அவ்வப்போது நடைபெறுகின்றன. இந்த அடர்வனம் உருவாகியதற்கு சங்க செயற்குழு உறுப்பினர் கண்ணதாசன், முகேஷ் அகர்வால், களப்பணியாளர்கள் பொன்ராஜ், குணா ஆகியோரின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது.
ஜப்பானில் உருவாகிய மியாவாக்கி குட்டி ஜப்பானுக்கு அருகில்
இதுதொடர்பாக பேசிய தொழிலதிபர் ஆனந்தன், "1970களில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த தாவரவியலாளர் அகிரா மியாவாக்கியின் முயற்சியில் உருவானதே மியாவாக்கி வனம் என அழைக்கப்படுகிறது. தற்போது இந்த முறை உலகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. உறைந்த ஏரியாவில் அதிக மரக்கன்றுகளை நட்டு அடர்ந்த வனத்தை உருவாக்குவதே மியாவாக்கி முறை.
குறைந்தபட்சம் ஓரடிக்கு ஓரடி என அந்தந்த மண்சார்ந்த மர வகைகளை நடுவது தான் சிறப்பு வாய்ந்தது. ஒன்றுக்கொன்று போட்டி போட்டுக்கொண்டு மிக விரைவாக மியாவாக்கி அடர் வனத்தில் மரங்கள் வளர்கின்றன. தமிழ்நாடு அரசு இதனை முன்னுதாரணமாகக் கொண்டு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொழிற் பேட்டைகளிலும் இதுபோன்ற வனங்களை உருவாக்குவதற்கு முயற்சி மேற்கொள்வது அவசியம். இதன் மூலம் சுற்றுச்சூழல் மாசுபாட்டை மிகப்பெரிய அளவில் குறைக்க முடியும்" என்று தெரிவித்தார்.
ஆக்ஸிஜன் பற்றாக்குறை என்று கரோனா பெருந்தொற்று காலத்தில் உயிரை காப்பாற்ற எங்கெங்கோ ஓடிக்கொண்டிருக்கிறோம். ஆனால் உயிர் வாழ்க்கைக்கு தேவையான ஆக்ஸிஜன் தரக்கூடிய மரங்களையும் வனங்களையும் நாம் அழித்துக் கொண்டிருக்கிறோம். இந்த நேரத்தில் மதுரை கப்பலூர் தொழிற்பேட்டையில் மேற்கொண்டுள்ள இந்த மியாவாக்கி அடர்வன முயற்சி மிகப் பாராட்டுக்குரியது.
இதையும் படிங்க: 'அண்ணாந்து பார்க்க வைத்த கல்யாணம்' - விமானத்திற்குள் டும்.. டும்.. சத்தம்