திருமங்கலம் லயன்ஸ் கிளப் சங்கங்களோடு நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், “ எய்ம்ஸ், துணைக்கோள் நகரம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை திருமங்கலத்திற்கு கொண்டு வந்துள்ளோம். இங்கு புதிய பேருந்து நிலையமும் விரைவில் வரும்.
தற்போது எய்ம்ஸ் மதுரைக்கு வருமா? வராதா? என்ற விவாதம் நடைபெற்று வருகிறது. வரும் என்று நாங்கள் போஸ்டர் ஒட்டினால், எதிர்க்கட்சிகள் வராது என ஒட்டுகின்றனர். பிரதமர் மோடி, முதலமைச்சர் உள்ளிட்டோரால் அடிக்கல் நாட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை இன்னும் அமையவில்லை என்பது எல்லோருக்கும் வருத்தம் தான்.
எய்ம்ஸ் அமைய கடன் வழங்கும் ஜப்பானிய நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யும் நேரத்தில், கரோனா என்ற அரக்கன் வந்ததால் அது தள்ளிப்போயுள்ளது. சீக்கிரம் ஒப்பந்தம் போடப்பட்டு எய்ம்ஸ் வருமா? வராதா? என்றவர்கள் கூட சிகிச்சை பெறக்கூடிய நிலை விரைவில் வரும். எய்ம்ஸ் மருத்துவமனை அமைந்தால் அதிமுக மீண்டும் வெற்றி பெறும் என்ற அச்சத்தால், தவறான தகவல்களை எதிர்க்கட்சிகள் அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு தெரிவித்து வருகின்றன.
அதிமுக அரசு இயங்குகிற அரசு, முடங்கிக் கிடக்கும் அரசு அல்ல. நிவர், புரெவி, வர்தா, கஜா என எந்த புயல் வந்தாலும் மக்கள் அலை என்கிற புயல் எங்களுக்கு ஆதரவாக இருப்பதால் 2021 லும் எடப்பாடி தலைமையிலான அரசு அமையும். பதவி முக்கியமா, மதுரையின் வளர்ச்சி முக்கியமா என்றால் மதுரையின் நலன்தான் எனக்கு முக்கியம். மதுரையை இரண்டாம் தலைநகரமாக மாற்றுவோம் என நேற்று கட்சி துவங்கியவர்கள் எல்லாம் கூறி வருகிறார்கள் ” என்றார்.
இதையும் படிங்க: ’எய்ம்ஸ்க்கான நிலத்தை தமிழக அரசு ஒப்படைக்கவில்லை’