மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள தனியார் கல்லூரியில் இன்று(ஜூலை.2) மின் விநியோகம், பராமரிப்பு பணிகள் குறித்து மண்டல அளவிலான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, "கடந்த ஆட்சியில் ஒன்பது மாதம் மின் பராமரிப்பு பணிகள் செய்யப்பட்டதா என்று சட்டசபையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு எதிர்க்கட்சியினர் பதிலளிக்கவிலை.
2006 முதல் 2011 ஆண்டுகள் வரை தமிழ்நாட்டில் மின் தேவை அதிகமாக இருந்தது. அப்போது முதலமைச்சராக இருந்த கருணாநிதி, புதிய மின் திட்டங்களை கொண்டு வந்தார். அப்போது, ஐந்து ஆண்டுகளாக தனியாரிடம் பெறப்பட்ட மின்சாரத்தின் விலை யூனிட்டுக்கு 3 ரூபாய் 58 பைசா. கடந்த ஆட்சியில் புதிய மின் உற்பத்தி திட்டங்கள் எதுவும் செயல்படுத்தப்படவில்லை.
அதனால் மின் கொள்முதல் அதிகரித்துள்ளது. அதன்காரணமாக 2016 முதல் 2021 ஆண்டுகள் வரை தனியாரிடம் பெறப்பட்ட மின்சாரத்திற்கு யூனிட்டுக்கு 5 ரூபாய் 1 பைசா தர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே கடந்த ஆட்சியில் செயல்படுத்தாத நிலுவையில் உள்ள திட்டங்களை கேட்டறிந்து அதனை செயல்படுத்துவதற்கான வழிவகைகளையும் செய்ய உள்ளோம்" என்றார்.