மதுரை: தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில், மதுரை தனியார் திருமண மண்டபத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், 26 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 13 லட்சத்து 16 ஆயிரம் ரூபாய்க்கான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார்.
தொடர்ந்து விழா மேடையில் அவர் பேசுகையில், "தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்கள் உள்ளன. தேர்தல் வியூகம் உள்ளது. அவர் சொல்வார் இவர் சொல்வார் என எதிர்பார்க்கவில்லை. ரஜினி எது நன்மை என தெரிந்து சொல்வார். எதில் ஊழல் இல்லை என ஸ்டாலின் கூறியுள்ளார். பஞ்ச பூதங்களில் ஊழல் செய்தது திமுக. தான் திருடி பிறரை பழி சொல்லுதல்போல ஸ்டாலின் தமிழ்நாடு அரசு மீது ஊழல் குற்றச்சாட்டு கூறுகிறார்.
உதயநிதி தரம் தாழ்ந்து விமர்சனம் செய்கிறார். அவர் தன் போக்கை மாற்றம் செய்து கொள்ள வேண்டும். தந்தை எவ்வழியோ அதையே மகன் செய்கிறார். உதயநிதியின் பரப்புரைகள் விமர்சனங்கள் மக்களை பாதிக்கிறது. உதயநிதி அதனை நிறுத்தி கொள்ள வேண்டும்.
யாருடைய கோட்டையையும் யாரும் உடைக்க முடியாது. நடிகருக்கு கூட்டம் கூடும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. 2011 தேர்தலில் குஷ்புவுக்கும் வடிவேலுக்கும் கூட்டம் கூடியது. இருந்தும் திமுகவால் ஜெயிக்க முடியவில்லை. கூட்டத்தை ஓட்டு என்று நினைக்க முடியாது.
நடிகர் கமல் ஹாசனை காண மக்கள் கூட்டம் கூடும். ஆனால் அது வாக்காக மாறாது. மிகப்பெரிய அடித்தளம் உள்ள திமுக நடிகர்கள் பரப்புரை செய்தபோது தோற்றது. கமல் ஹாசன் எம்மாத்திரம்.
ஆளுங்கட்சியை தவறாக பேசுவதே ஸ்டாலினின் நிலைப்பாடு. அரசை குறை கூறுவதே வாடிக்கையாக வைத்திருப்பதால் மக்கள் இவருக்கு வேறு வேலை இல்லை என நினைத்துவிட்டனர். எங்களுடன் கூட்டணி அமைப்பவர்கள் வெற்றி பெற நாங்கள் உழைப்போம். முதலமைச்சர் வேட்பாளராக பழனிசாமியை ஏற்பவர்களோடு தேர்தலை சந்திப்போம், உழைப்போம்" என்றார்.
இதையும் படிங்க: புதுக்கோட்டை, தேனியிலும் ஜல்லிக்கட்டு! - அரசாணை வெளியீடு!