மதுரை முனிச்சாலையில் தமிழ்நாடு கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ பொதுமக்களுக்கு கரோனா நிவாரணப் பொருள்களை வழங்கினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ”திமுக இளைஞரணித் தலைவரான உதயநிதி ஸ்டாலினும், திமுக தலைவர் ஸ்டாலினும் இணைந்து கரோனா சூழலைப் பயன்படுத்தி பொதுமக்களிடம் அரசியல் செய்துவருகிறார்கள். திமுகவில் தற்போது மூத்தத் தலைவர்களே இல்லையா? உதயநிதி ஸ்டாலின் எல்லாம் கேள்வி கேட்கும் நிலைக்கு வந்திருக்கிறார் என்றால் அவர்களது குடும்பம் மட்டும் தான் அரசியல் செய்துவருகிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம்.
கருணாநிதியின் குடும்பத்தைத் தவிர திமுகவில் உள்ள மற்றவர் அனைவரும் தமிழ்நாடு முதலமைச்சரின் செயல்பாடுகளைப் பாராட்டிவருகிறார்கள். முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் கரோனா விவகாரத்தில் மக்களைக் காக்க சிறப்பாகச் செயல்பட்டுவருகிறார்கள். தூய்மைப் பணியாளர்கள், மக்கள் நல்வாழ்வுத் துறை, மாவட்ட நிர்வாகங்கள் என அனைத்துத் துறைகளும் சிறப்பாகச் செயல்பட்டுவருகின்றன. கட்சியை நிலைப்படுத்த வேண்டும் என்பதற்காக தந்தையும், மகனும் தேவையற்ற கருத்துக்களைக் கூறிவருகிறார்கள்.
மதுரை மக்களவை உறுப்பினர் வெங்கடேசன் மதுரையில் பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருந்தார். அதனை முதல்வரிடம் கூறியுள்ளோம். நிச்சயமாக கரோனா தடுப்பு நடவடிக்கை களத்தில் கோட்டை விடமாட்டோம். கட்சி பேதமின்றி நலத்திட்ட உதவிகளை மதுரை மக்களுக்கு வழங்கிவருகிறோம். மதுரை மாவட்டத்தில் அதிகமான நபர்கள் சிகிச்சை முடிந்து ஆரோக்கியமாக குணமடைந்து வீடு திரும்பிவருகின்றனர்.
அரசு என்ன நடவடிக்கை எடுத்தாலும், தகுந்த இடைவெளியைக் கடைப்பிடித்து, முகக்கவசத்தை அணிந்தால் மட்டுமே நோயினைக் கட்டுக்குள் கொண்டுவரமுடியும். மூன்று மாதங்களாக மக்களின் இயல்பு வாழ்க்கை அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் நிலையை அறிந்துதான் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. முதலமைச்சரின் நிதிநிலை அறிக்கையைப் பொறுத்தே நியாயவிலைக் கடைகளில் மீண்டும் நிவாரணம் வழங்குவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.