மதுரை ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், மதுரை ஆட்சியர் வினய் உள்ளிட்ட அரசு அலுவலர்களோடு ஆலோசனை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”சிகிச்சைக்குப் பிறகு கரோனா தொற்று முழுவதும் குணமடைந்து வீட்டிற்குத் திரும்புவது இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிகம். கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையில் தமிழ்நாடு முன்மாதிரி மாநிலமாகத் திகழ்கிறது.
முதலமைச்சரின் தொலைநோக்கு செயல்பாடுகளால் கரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டுவருகிறது. சிவப்பு, பச்சை, ஆரஞ்சு மண்டல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு விதிமுறைகள் விதிக்கப்பட்டிருப்பது மக்களை காப்பாற்றுவதற்காகத்தான்.
தகந்த இடைவெளியைப் பின்பற்றாத காரணத்தால்தான் வியாபாரிக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. எனவே கோயம்பேடு சந்தை நமக்கு மிகப்பெரிய பாடத்தை கற்றுக்கொடுத்துள்ளது. தகுந்த இடைவெளியைப் பின்பற்றாத கடைகளுக்குச் சீல்வைக்கப்படும்.
சுகாதாரத் துறையால் நோய்த்தொற்று முமுமையாகக் கண்காணிக்கப்பட்டுவருகிறது. நோய்த்தொற்று குறைய குறைய சில தளர்வுகள் செய்யப்படும்” என்றார்.