மதுரை: தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை சார்பில் 5 மாவட்டங்களுக்கு இடையேயான தென்மண்டல ஆய்வு கூட்டம் மதுரை சிந்தாமணி பகுதி தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், ' "இல்லம் தேடி கல்வி" முறையை இந்தாண்டு தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவித்ததற்காக நிதி ஒதுக்கீடு செய்து தற்போது நடைமுறைப்படுத்தி உள்ளோம். பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோருக்காக ஒதுக்கப்படும் நிதி கடந்த ஆட்சியில் ஒழுங்காக போய் சேரவில்லை என்று கூறினார்.
முதல் கட்டமாக ரூ.1,300 கோடி நிதி: பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி பேசுகையில், 'ரூ.37,000 கோடி பள்ளிக் கல்வித்துறைக்கு முதலமைச்சர் ஒதுக்கியுள்ளார். பள்ளி கட்டிட மேம்பாட்டு வளர்ச்சிக்காகப் பேராசிரியர் அன்பழகன் திட்டத்தின் கீழ் ஐந்து ஆண்டுகளுக்கு ரூ.7000 கோடி பள்ளிக்கல்வித்துறைக்கு வழங்கியுள்ளது. முதற்கட்டமாக ரூ.1,300 கோடி வழங்கப்பட்டுள்ளது.
கட்டிடம் உறுதியாக இருப்பதற்கு அடித்தளம் மிகவும் அவசியம். அதேபோல் பள்ளி மாணவர்களுக்கு தொடக்கக்கல்வி தான் அடித்தளம். மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதால் ஆசிரியர்கள் தேவை அதிகரித்துள்ளது.
இதனால், ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டிய அவசியம் உள்ளது. பள்ளிக் கல்வித்துறையில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை அமைச்சர் அறிவிக்க உள்ளார். மதுரையில் உள்ள கிராமப்புற பள்ளி வளர்ச்சிக்கு அதிக அளவு நிதி ஒதுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்குக் கோரிக்கை விடுக்கிறேன்' என்று தெரிவித்துள்ளார்.
கல்வி மேம்பாட்டு வளர்ச்சி: கூட்டத்தில் பேசிய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, 'பழுதடைந்த பள்ளிக் கட்டிடங்கள் கணக்கிடப்பட்டுள்ளன. வட்டார கல்வி அலுவலர்கள் பள்ளிக் கல்வித் துறைக்கு முக்கியத்துவம் கொடுத்து தங்களுடைய சட்டமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பல்வேறு கல்வி மேம்பாட்டு வளர்ச்சிக்கு நிதியைக் கேட்டுப் பெற வேண்டும். மாவட்டங்களில் உள்ள நூலகங்களை மேம்படுத்த வேண்டும். நூலகத் துறைக்கு என்று ஒரு ஐஏஎஸ் அதிகாரியை நியமித்துள்ளோம்.
பள்ளிக் கட்டடங்களின் தரம்: சென்னையில் நடந்தது போன்று தென் தமிழ்நாட்டிலும் நடைபெற்று விடக்கூடாது என்பதற்காக இந்தக் கூட்டம் நடைபெற்று வருகிறது. மாணவர்களுடைய சேர்க்கை அதிகரிப்பதால் பள்ளி கட்டிடங்கள் மற்றும் வளர்ச்சிகள் தரமானதாக இருக்க வேண்டும். கட்டமைப்பு என்பது குடிநீர் வசதி கழிப்பிட வசதி மட்டும் போதாது.
மாணவர்களுக்குத் தரமான ஆசிரியர்கள் இருப்பதுதான் கட்டமைப்பு வசதி. நடந்து முடிந்த ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட 3 மாநாடுகளிலும் பேசப்படும். விவாதிக்கப்படும் ஒரே துறை பள்ளிக் கல்வித்துறை தான்.
மாணவர்களுக்கான நிதி: 35 லட்சம் மாணவர்கள் பயன் பெற 1,78,000 "இல்லம் தேடி கல்வி" முறை மையத்தை ஆரம்பித்துள்ளோம். இத்திட்டத்தின் நோக்கம் மாணவர்களுக்கு சரியான கல்வி அறிவு இருக்கிறதா.? கொடுக்கின்ற நிதி முறையாகப் பயன்படுத்தப்படுகிறதா.? என்பதைக் கண்காணிப்பது தான். பள்ளிக் கல்வித் துறைக்கு ஒன்றிய அரசு வழங்கும் நிதியை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். வட்டார கல்வி அலுவலர்கள் மனது வைத்தால் மட்டும் தான் பள்ளிக் கல்வித்துறை மாற்றம் பெறும்' என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கு - சசிகலா தரப்பு விசாரணை நிறைவு