மதுரை: மதுரை மாவட்டம் மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட வீரபாண்டியில் கால்நடை மருத்துவ முகாமை வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், " பொங்கல் திருநாளையொட்டி நடைபெறும் ஜல்லிகட்டு போட்டியில் நாட்டு இன மாடுகள் மட்டுமே கலந்து கொள்ள முடியும்.
கலப்பின மாடுகளுக்கு டோக்கன் கொடுக்க மாட்டாது. நாட்டு மாட்டு இனங்களின் இனப்பெருக்கத்தை அதிகரிக்கும் நடவடிக்கையாக இது அமையும். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியில் ஜல்லிகட்டு முறையாக நடத்த உச்ச நீதிமன்றம் சென்று அனுமதி பெற்றுத் தரப்பட்டது.
அதற்குப் பிறகு வந்த அதிமுக ஆட்சியில் ஜல்லிக்கட்டு விதிமுறைகளை முறையாக கடைபிடிக்காத காரணத்தால் பெரும் பின்னடைவை சந்திக்க நேர்ந்தது. தற்போதைய திமுக ஆட்சியில் உச்ச நீதிமன்றம் விதித்த நெறிமுறைகளின்படி ஜல்லிக்கட்டு மிகச்சிறப்பாக நடைபெறும். இதில் தமிழ்நாடு முதலமைச்சர் பங்கேற்பது குறித்து அவரிடம் அனுமதி பெற்று அறிவிக்கப்படும்" என்றார்.
இதையும் படிங்க: 6 மாத குழந்தை நரபலி? - தஞ்சையில் திடுக்கிடும் சம்பவம்