மதுரை: மதுரை மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனை வளாகத்தின் புதிய கட்டடத்தை வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி திறந்துவைத்தார்.
அதன்பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "வரும் 30ஆம் தேதி தமிழ்நாடு ஆளுநர், பல்கலை., துணைவேந்தர்களை சந்திப்பது குறித்து முதலமைச்சர் கருத்தை தெரிவிப்பார். ஆளுநர் விவகாரத்தைப் பொருத்தவரையில், முதன்மை அலுவலர்களோடும் அமைச்சர்களுடனும் முதலமைச்சர் ஆலோசித்து நல்லதொரு முடிவை எடுப்பார்.
மதுரை வரும் முதலமைச்சர்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பசும்பொன் முத்துராமலிங்கரின் நினைவிடத்துக்கு சென்று மரியாதை செலுத்துவதற்காக இன்று (அக். 29) மதுரை வருகிறார். மதுரையில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளிலும் கலந்துகொள்கிறார்.
முந்தைய அதிமுக அரசு, எந்தத் திட்டத்தைக் கொண்டு வந்து, நாங்கள் அதைத் தடுத்தோம் என்பது புரியவில்லை. புதிதாக அமைந்துள்ள திமுக அரசு, பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளது. பொதுமக்கள் பயன்படக்கூடிய வகையில் பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் கொண்டு வந்துள்ளார்.
ஓபிஎஸ் காரணமில்லாமல் குறைக்கூறுகிறார்
பத்திரிகைகள், நாட்டு மக்கள் அனைவரும் பாராட்டும் வகையில் உள்ளாட்சித் தேர்தலை ஒன்பது மாவட்டங்களில் நடத்தி பல்வேறு இடங்களில் திமுக வெற்றி பெற்றுள்ளது.
முன்னாள் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், தவறு எங்கே நடந்தது எங்கே முறைகேடு நடந்தது என்பதை தெளிவாக சொல்ல வேண்டும். எந்த காரணமும் இல்லாமல் குறை சொல்லக்கூடாது. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கொண்டுவந்த காப்பீட்டு திட்டத்தைக் கூட தற்போதைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மீண்டும் தொடங்கிவைத்துள்ளார்.
ஓ. பன்னீர்செல்வம் ஏதாவது குறை சொல்ல வேண்டும் என்பதற்காக மட்டுமே குறை சொல்லி வருகிறார். இந்த அரசைப் பற்றி நல்லபடியாக மக்கள் புரிந்து வைத்துள்ளார்கள். அதுவே எங்களுக்குப் போதுமானது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அக்.30 ஆளுநர், துணைவேந்தர்கள் ஆலோசனைக் கூட்டம்!