மதுரை: தமிழ்நாட்டில் நவம்பர் 1ஆம் தேதி முதல், 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக செப்.1ஆம் தேதி முதல்கட்டமாக, 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன.
இதனிடையே, ஏஒய்.4.2 வகை கரோனா தொற்று மகாராஷ்டிரா, மத்திய பிரதேஷம், கர்நாடகவில் பரவிவருகிறது. ஏஒய்.4.2 வைரஸ், கரோனாவைவிட 6 மடங்கு வேகமாக பரவும் தன்மை கொண்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளிகள் திறக்கப்படுமா எனும் சந்தேகம் எழுந்தது.
இந்த நிலையில், மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ், "நவம்பர் 1ஆம் தேதியில் இருந்து 1 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுவது உறுதி.
இந்த வேளையில் மாணவர்கள் கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டிய அவசியமில்லை. பெற்றோரின் விருப்பப்படி பள்ளிக்கு வரலாம். ஒருநாள் விட்டு ஒருநாள் வகுப்புகள் நடத்தப்படும். எந்த வகுப்பு மாணவர்கள், எந்த நாளில் பள்ளிக்கு வர வேண்டும் என்பதை சம்பந்தப்பட்ட பள்ளிகளே முடிவு செய்துகொள்ளலாம்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 3ஆம் அலை... 1 முதல் 8 ஆம் வகுப்பு பள்ளிகள் திறப்பில் மாற்றமா?