மதுரை: தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த முகமது இஸ்மாயில் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், " காயல்பட்டினம் நகராட்சியில் 18 வார்டுகள் இருக்கின்றது. கடந்த 2011ஆம் ஆண்டு மக்கள் தொகைக்கணக்கெடுப்பின்படி காயல்பட்டினம் நகராட்சியில் 50 ஆயிரத்துக்கும் மேல் மக்கள் வசிக்கின்றனர்.
ஆனால், குறைந்த மக்கள் தொகை கொண்ட சில நகராட்சிகளில் அதிகமான எண்ணிக்கையில் வார்டுகள் பிரிக்கப்பட்டுள்ளன. இதனால் அந்த நகராட்சிகளில் மக்கள் பணியில் ஈடுபடும் நபர்கள், சுலபமாக மக்களுக்கு சேவை செய்ய முடிகிறது.
தற்போது நகர்ப்புற தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு தேர்தல் நடக்க இருக்கிறது. அதிக மக்கள் தொகை கொண்ட காயல்பட்டினம் நகராட்சியில் குறைந்த எண்ணிக்கையில் வார்டுகள் பிரிக்கப்பட்டுள்ளன.
இதனால் வார்டு கவுன்சிலர்கள் தங்களது பணிகளை மேற்கொள்ள சிரமமாக இருக்கும். எனவே,காயல்பட்டினம் நகராட்சியில் அதிக எண்ணிக்கையில் வார்டுகள் பிரித்து, அதன் பின்பு தேர்தல் நடத்த அலுவலரிடம் மனு அளிக்கப்பட்டது.
ஆனால், மனு மீது எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே, நடக்கவிருக்கும் நகராட்சி தேர்தல் அறிவிப்புக்குத்தடை விதித்து, காயல்பட்டினம் நகராட்சியில் அதிகப்படியான எண்ணிக்கையில் வார்டுகள் பிரித்த பின்பு தேர்தல் நடத்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், கிருஷ்ணன் ராமசாமி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், மனுதாரர் தாமதமாக வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
எனவே, ஏன் அபராதம் விதிக்ககூடாது எனக்கேள்வி எழுப்பினார். இதையடுத்து மனுதாரர் வழக்கை திரும்பப் பெறுவதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: கருணாநிதி முன்பு கனிமொழி சொன்ன உள்ளாட்சித் தேர்தலுக்கான வெற்றி ஃபார்முலா