புதுக்கோட்டையை சேர்ந்த பட்டதாரி ஆசிரியர் முத்து, 2004இல் அரசுப்பள்ளியில் தொகுப்பூதிய அடிப்படையில் ஆசிரியராக நியமிக்கப்பட்டார். அவரது பணி 2006ஆம் ஆண்டு வரன்முறை செய்யப்பட்டது. இந்த உத்தரவை ரத்து செய்து, 2004ஆம் ஆண்டு முதல் பணி வரன்முறை செய்யக்கோரி, முத்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம், "தமிழகத்தில் ஆசிரியர்கள் ஒரு வாரத்திற்கு 14 மணி நேரம் மட்டுமே பணிபுரிகின்றனர். 7 நாளில் மொத்தமுள்ள 168 மணி நேரத்தில் 14 மணி நேரம் மட்டும் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, மக்கள் வரிப்பணித்தில் இருந்து 1 லட்சம் ரூபாய்க்கு மேல் ஊதியம் வழங்கப்படுகிறது.
இவ்வாறு கெளரவமான ஊதியம் பெறும் ஆசிரியர்களின் பொறுப்பும், கடமையும் தனியார் நிறுவன ஊழியர்களை காட்டிலும் பல மடங்கு அதிமாக இருக்க வேண்டும். மேலும் மனுதாரர் 2004இல் பணி நியமன விதிப்படி பணி நியமனம் செய்யப்படவில்லை. இதனால் மனுதாரரின் கோரிக்கை ஏற்க முடியாது" எனக் கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி, முத்து மேல்முறையீடு செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், விஜயகுமார் அமர்வு, "தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவில் மனுதாரரின் கோரிக்கையை தவிர்த்து, கூறப்பட்டுள்ள ஆசிரியர்கள் சம்பந்தமான, பள்ளிக்கு உள்ளேயும், வெளியேயும் கண்காணிக்கப்பட வேண்டும் உள்ளிட்ட கருத்துக்களை நீக்குவதாக உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.