மதுரை: திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ புதூரில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டில் தானே புயல், வர்தா புயல், கஜா புயல் உள்ளிட்ட பல்வேறு புயல்கள் வந்து லட்சக்கணக்கான ஏக்கர் வேளாண் நிலம் பாதிக்கப்பட்டது, பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.
மத்திய அரசிடம் மாநில அரசு ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 474 கோடி ரூபாய் நிவாரண நிதியாகக் கேட்டது. ஆனால் மோடி அரசு ஆறாயிரத்து 434 கோடி ரூபாய் மட்டுமே வழங்கியது. கேட்டதில் நான்கு விழுக்காடு மட்டுமே கொடுக்கப்பட்டது. இந்த அரசு தமிழ்நாட்டின் உரிமைகளை எல்லாம் காவு கொடுத்துவிட்டது.
இவர்களால் தமிழ்நாட்டிற்கு எந்தத் திட்டத்தையும் பெற முடியாது. குடியுரிமைச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். இவர்களும் பாட்டாளி மக்கள் கட்சியும் எதிர்த்து வாக்களித்திருந்தால் அந்தச் சட்டம் செல்லாமல் போயிருந்திருக்கும். திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்தபடி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்போது நாங்கள் கூறுவது எல்லாம் உண்மை என்பது நிரூபிக்கப்படும்.
பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டிற்கு வந்து ஒரு கருத்தைச் சொல்லியிருக்கிறார். அவர்களுடைய தகுதிக்கு அது அழகல்ல; தமிழ்நாட்டில் திமுகவினர் பெண்களை இழிவுபடுத்துகின்றனர்; பெண்களை மதிப்பதில்லை என்று பிரதமர் பேசியிருக்கிறார்.
யோகி ஆதித்யநாத் ஆட்சிபுரிவது அமெரிக்காவிலா? இந்தியாவில்தானே; உத்தரப் பிரதேசத்தில்தானே. அங்கே தேசிய குற்றப் பதிவேடு அமர்வில் 2019இல் அளித்துள்ள அறிக்கையில், 59 ஆயிரத்து 853 குற்றங்கள் உத்தரப் பிரதேசத்தில் நடந்துள்ளன என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தியாவில் அதிகமாக 14 விழுக்காடு குற்றங்கள் பாஜக முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆட்சி செய்யும் உத்தரப் பிரதேசத்தில்தான் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 2020 செப்டம்பர் 14ஆம் தேதி ஹாத்ராஸ் என்ற இடத்தில் ஒரு பட்டியலின பெண்ணை கூட்டு வன்முறையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி படுகொலை செய்தனர். இது எந்த மாநிலத்தில் நிகழ்ந்தது என்று நான் பிரதமரைக் கேட்கிறேன்.
அதேபோல் தமிழ்நாட்டில் தூத்துக்குடி என்று ஒரு மாவட்டம் இருப்பது பிரதமருக்குத் தெரியுமா? அங்கு தங்களின் உரிமைகளுக்காகப் போராடிய அப்பாவி மக்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்பதை பிரதமர் அறிவாரா? அனைத்தையும் அறிந்துவைத்திருந்தும், ஒன்றும் தெரியாததுபோல இங்கு வந்து பேசிச்செல்வது அவரின் பொறுப்புக்கு ஏற்புடையதல்ல.
இங்கு இருக்கக்கூடிய அரசு ஊழல் அரசு அந்த ஊழல் காரணமாகldதான் உங்கள் காலடியில் அவர்கள் புழு பூச்சியைப்போல கிடக்கிறார்கள். அதனால்தான் திமுக தலைவர் ஸ்டாலின் ஆளுநரிடத்தில் ஊழல் பட்டியல் கொடுத்தார். அவர் எழுதிக் கொடுத்தார் அவர் அதனை குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டார்” எனக் கூறினார்.