கரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி கொண்டிருக்கும் நிலையில், அதிலிருந்து மக்களை காப்பாற்றிக்கொள்ள முகக் கவசம் அணிவதை அனைத்து நாடுகளும் வலியுறுத்தி வருகின்றன. அந்த வகையில், இந்தியாவில் உள்ள அனைத்து மாநில அரசுகளும் தங்கள் மக்களை காப்பாற்ற முகக் கவச உற்பத்தியை அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. இருந்தபோதிலும், ஒருசில கடைகளில் அதிக விலைக்கு முகக் கவசம் விற்கப்படுவதால் ஏழை எளிய மக்கள் வாங்கி அணிவது என்பது கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது.
இந்நிலையில், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்த மதுரை ஐயர் பங்களாவைச் சேர்ந்த இளைஞர் சுந்தரேசன் என்பவர் இதற்கு எளிய தீர்வு ஒன்றை கண்டறிந்துள்ளார்.
இது குறித்து ஈடிவி பாரத் செய்தி ஊடகத்துக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில், "எளிய மக்களும் முகக் கவசம் அணியவேண்டும், அது அவர்களுக்கு பெரிய பாரமாக இருக்கக் கூடாது என்ற அடிப்படையில், ஒருமுறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் முகக் கவசங்களை சுத்திகரிப்பு செய்ய கருவி ஒன்றை கடந்த ஒரு மாதமாக கடும் முயற்சியில் உருவாக்கியுள்ளேன்.
வெளிநாடுகளில் காய்கறி பழங்களில் உள்ள கிருமிகளை சுத்தம் செய்ய சி ரே கதிர்களை உற்பத்தி செய்யும் கருவி ஒன்றை பயன்படுத்துகின்றனர். ஐரோப்பிய நாடுகள், சிங்கப்பூர் மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகளில் தொழில்நுட்பம் மிகவும் புகழ் பெற்றது. இதே தொழில்நுட்பத்தை முகக் கவசங்களை சுத்தம் செய்வதற்கு ஏன் பயன்படுத்தக் கூடாது என்ற சிந்தனை எனக்குள் ஏற்பட்டது. வெளிநாடுகளில் வாழ்கின்ற எனது நண்பர்களோடு கருவியின் வடிவமைப்பு குறித்து கலந்தாலோசனை செய்தேன். பிறகு அதே வடிவமைப்பை கொண்டு அந்த கருவியை நான் உருவாக்கி உள்ளேன். பயன்படுத்திய முகக் கவசங்களை இக்கருவிகளில் வைத்துவிட்டு மூன்றிலிருந்து 30 நிமிடங்கள் இயக்கினால் அதில் உள்ள கிருமிகள் அனைத்தும் அழிந்துவிடும். பிறகு வழக்கம்போல் அதனை எடுத்து பயன்படுத்தலாம். கிருமி நீக்கம் செய்யும் எனது கண்டுபிடிப்பான இந்தக் கருவிக்கு இஸட் பாக்ஸ் என்று பெயரிட்டுள்ளேன்.இந்தக் கருவியை உற்பத்தி செய்வதற்கான அடக்க விலை ரூ. 5 ஆயிரத்து 500 ஆகும். அரசு உதவி செய்தால் இதன் அடக்க விலையை இன்னும் வெகுவாக குறைக்க முடியும். மத்திய, மாநில அரசுகளின் அங்கீகாரத்திற்காக இந்தக் கருவியை அனுப்பியுள்ளேன். ஒப்புதல் கிடைத்துவிட்டால் அனைத்து தொழிற்சாலைகள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், அலுவலகங்கள் போன்றவற்றில் ஒருமுறை வாங்கிவிட்டால் பல ஆண்டுகள் இதனை பயன்படுத்தலாம். இதன் மூலம் பல லட்சக்கணக்கான ரூபாய் மிச்சப்படுத்த முடியும்", என்கிறார்.