மதுரை: பீ.பி. குளம், பி.டி. ராஜன் சாலை பகுதியில் வசித்துவரும் மலைராஜன் - தங்கம்மாள் தம்பதியினரின் மகன் ஈஸ்வரன் (30). இவர் தனது வீட்டின் அருகே நண்பர்களுடன் நின்று கொண்டிருந்தபோது தல்லாகுளம் காவல் நிலையத்தைச் சேர்ந்த நான்கு காவலர்கள் ஈஸ்வரனிடம் மது வைத்திருப்பதாக விசாரணை நடத்தி அடித்ததாகக் கூறப்படுகிறது. அப்போது ஈஸ்வரன் காவலர்களிடமிருந்து தப்பி ஓடியுள்ளார்.
இதனையடுத்து, ஈஸ்வரன் அமர்ந்திருந்த பகுதியில் நான்கு மதுபாட்டில்களைக் கைப்பற்றியதாகவும் மேலும் கூடுதலாக மதுபாட்டில்கள் இருக்கின்றனவா என்பது குறித்து ஈஸ்வரனின் வீட்டிற்குச் சென்று காவல் துறையினர் சோதனை நடத்தியுள்ளனர்.
தற்கொலை முயற்சி
ஈஸ்வரனின் தாயார் தங்கம்மாள் செல்போனை பறித்துக்கொண்டதுடன், அவரது இரு சக்கர வாகனத்தின் சாவியையும் காவல் துறையினர் எடுத்துச் சென்றுவிட்டனர்.
இதனிடையே காவல் துறையினர் அடித்ததால் தப்பியோடிய ஈஸ்வரன் தல்லாகுளம் காவல் நிலையம் அருகேயுள்ள அம்பேத்கரின் சிலை முன்பாக தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
அங்குப் பாதுகாப்புப் பணியிலிருந்த காவல் துறையினர், பொதுமக்கள் அவரை மீட்டு, அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதித்தனர். 70 விழுக்காடு தீக்காயத்துடன் ஈஸ்வரன் சிகிச்சை பெற்றுவருகிறார்.
காணொலி காட்சி
ஈஸ்வரனின் பெற்றோர் தல்லாகுளம் காவல் நிலையத்திற்கு 10 மணிக்குச் சென்றபோது ஈஸ்வரனுடைய வாகனத்தின் சாவியையும் செல்போனையும் ஒப்படைத்துவிட்டு வெள்ளைத்தாளில் கையெழுத்துப் பெற்றுள்ளனர்.
இதனையடுத்து நள்ளிரவு ஒரு மணிக்கு காவல் நிலையத்திலிருந்து ஈஸ்வரனின் பெற்றோரைத் தொடர்புகொண்டு ஈஸ்வரன் தீக்குளித்தது குறித்து தகவல் அளித்துள்ளனர்.
இந்நிலையில், தீக்காயங்களுடன் காணொலி வெளியிட்டுள்ள ஈஸ்வரன் தன்னை காவல் துறையினர் அடிக்கடி துன்புறுத்தியதோடு பணம் கேட்டதாகவும், பொய் வழக்குப் பதிவு செய்வதாக மிரட்டியதாகவும் கூறியுள்ளார். தற்போது இந்தக் காணொலி சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெற்றோர் கோரிக்கை
இது குறித்து ஈஸ்வரனின் பெற்றோர் தரப்பில், இதற்குக் காரணமான காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் சிபிசிஐடி விசாரணைக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கைவைத்துள்ளனர்.
இதையும் படிங்க: Suicide Prevention: அதிகரித்துவரும் தற்கொலைகளைத் தடுப்பது எப்படி?