மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பாக, மதுரை மாவட்டத்தின் புறநகர்ப் பகுதிகளில் உள்ள காவல்நிலைய எல்லைக்குட்பட்ட குற்றச் சம்பவங்களைத் தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. அதன் ஒரு அங்கமாக, காவலன் என்ற செயலி மூலம் பூட்டிய வீடுகளைக் கண்காணிக்கும் வசதி, புகார் அளிக்கும் வசதி என பல்வேறு வசதிகளை அளித்துவருகின்றனர்.
இந்நிலையில், இச்செயலியில் தற்போது புதியதாக மூன்று வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. தற்போது புதிதாக ஐஎம்இஐ எண்கள் மூலம், திருடப்பட்ட வாகனங்கள் அல்லது திருடப்பட்ட கைப்பேசி குறித்த தகவல்கள் பதிவேற்றம் செய்யப்படும். இதன் மூலம் வாகனம் வாங்கும் முன் வாகனம் உண்மையாகவே யாருக்குச் சொந்தமானது என்றும், அல்லது திருட்டு வாகனமா என்பன போன்ற விவரங்களை அறிந்து கொள்ளும் வகையில் இந்தச் செயலியில் வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளது.
இது மட்டுமல்லாமல், காவல் துறை வரலாற்றில் முதல்முறையாக, செயலியில் தேவையான தகவலை, ஒலி மொழி மூலம் கேட்டுப் பெற்றுக்கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தாய்மொழியான தமிழ், ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில், இதன் தரம் மேம்படுத்தப்பட்டுள்ளதாக, மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.