கரோனா நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் கடைகள், வணிக நிறுவனங்கள், கட்டுமானப் பணிகள் என அனைத்தும் முடக்கப்பட்டன. தொடர்ந்து 40 நாட்களுக்கும் மேலாக நீடித்த இந்த ஊரடங்கில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு, பல்வேறு நிபந்தனைகளுடன் குறிப்பிட்ட தொழில்கள், பணிகள் செயல்பட நேற்று முதல் தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியது.
முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும், கட்டுமானம், தொழிற்சாலை உள்ளிட்டப் பணிகளில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான தொழிலாளர்களுடன் இயங்க வேண்டும் உள்ளிட்டப் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டது.
இந்நிலையில் ஊரடங்கால் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக நிறுத்தப்பட்டிருந்த மதுரை - போடி அகல ரயில் பாதை பணிகள், தற்போது செயல்படத் தொடங்கியுள்ளது.
மீட்டர்கேஜ் ரயில் பாதையாக இருந்த வழித்தடத்தை, அகல ரயில் பாதையாக மாற்றுவதற்கு திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு, கடந்த 2010ஆம் ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டன. தொடர்ந்து 10ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடைபெற்று வந்த இந்தப் பணிகள் கடந்த 2 ஆண்டுகளாக வேகமெடுத்தது. இதன் காரணமாகச் சென்ற ஆண்டில் முதற்கட்டமாக மதுரை - உசிலம்பட்டி வரையிலான 37 கி.மீ., வழித்தடம் நிறைவு பெற்று சோதனை ஓட்டமும் நடைபெற்றது.
தொடர்ந்து உசிலம்பட்டி முதல் போடிநாயக்கனூர் வரையிலான 53 கி.மீ., வழித்தடப் பணிகளும் வேகமாகச் செயல்பட்டு, 2020ஆம் ஆண்டு இறுதிக்குள் முடிப்பதற்கு திட்டமிடப்பட்டது.
ஆனால், ஊரடங்கால் பணிகள் தடைபட்டு, தற்போது மீண்டும் பணிகள் செயல்படத் தொடங்கியுள்ளது. இந்த வழித்தடத்தில் ஆண்டிபட்டி கணவாய், வைகை, கொட்டக்குடி ஆற்றுப்பாலங்கள் மற்றும் ஆண்டிபட்டி, தேனி, போடி நாயக்கனூர் ஆகிய ரயில் நிலைய கட்டடங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பணிகள் செயல்படத் தொடங்கியுள்ளன.
இதுவும் 50% தொழிலாளர்களுடன் பணிகள் நடைபெற்று வருகிறது. அடுத்தடுத்து தொடங்கும் பருவமழையினால் கட்டுமானப் பணிகளில், மேலும் தொய்வு ஏற்படக்கூடும் என்பதால், திட்டம் முடிவுக்கு வருவதில் காலதாமதம் உண்டாகும் எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க:
சுகாதாரத்துடன் ரயில்களை இயக்க பயணிகள் கருத்துக்கணிப்பில் தகவல்!'