மதுரையின் வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளை இணைக்கும் வகையில் வைகை நதியின் குறுக்கே 1885 ஆம் ஆண்டு, அன்றைய ஆங்கிலேய அரசால் கட்டப்பட்டதுதான் ஏவி எனப்படும் ஆல்பர்ட் விக்டர் மேம்பாலம். கருங்கற்களால் கட்டப்பட்ட உறுதிமிக்க இந்தப் பாலம், இன்று தனது 135 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
இதையொட்டி வைகை நதி மக்கள் இயக்கத்தின் சார்பில் இன்று ஏவி மேம்பாலத்திற்கு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அப்போது பேசிய அவ்வியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ராஜன், ” மதுரையின் வரலாற்று அடையாளமாக ஏவி மேம்பாலம் திகழ்கிறது. 100 ஆண்டுகளை கடந்து விட்டால் அதனை பாரம்பரிய சின்னமாக அறிவிக்க வேண்டும் என்ற அடிப்படையில், ஆல்பர்ட் விக்டர் மேம்பாலத்தை யுனெஸ்கோ நினைவு சின்னமாக அறிவிக்க வேண்டும் “ என்றார்.
நாள்தோறும் லட்சக்கணக்கானோர் பயன்படுத்தும் இந்தப் பாலத்தின் பல்வேறு இடங்கள் தூர்ந்து கிடப்பதாகவும், எனவே, பாலத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்றும், மதுரையைச் சேர்ந்த இளைஞர் விக்னேஷ் கூறினார். மேலும், இந்த பாலம் கட்டப்பட்டது குறித்த அடையாள ஆவணமாக அதன் அடிக்கல் நாட்டப்பட்ட கல்வெட்டு மட்டுமே உள்ளதாகவும், அதனை பொதுமக்கள் அனைவரும் பார்க்கும் வகையில் சீரமைத்து பாதுகாப்பது மிகவும் அவசியம் என்றும், கலாம் சமூக நல அறக்கட்டளையின் நிர்வாகி மாயகிருஷ்ணன் கூறினார்.
இதையும் படிங்க: ஊட்டியில் விடப்பட்டுள்ள தனியார் மலை ரயிலும்; அதற்கு எழும் கண்டனங்களும்!