மதுரை: உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயில் ஆவணி மூலத்திருவிழா கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியதை அடுத்து தினமும் சுவாமி, அம்மனின் வீதியுலா நடைபெற்று வருகிறது.
சித்திரை திருவிழாவின்போது மீனாட்சிக்கு பட்டாபிஷேகம் நிகழ்த்தி, மதுரையின் ஆட்சிப்பொறுப்பு வழங்கப்பட்டுவரும் நிலையில், ஆவணி மூலத்திருவிழாவின்போது மீனாட்சியிடம் இருந்து மீண்டும் ஆட்சிப் பொறுப்பு சிவபெருமானுக்கு வருவதாக ஐதீகம்.
10 நிகழ்வுகளும் முடிவடைந்தன
இந்த ஆவணி விழாவில் மதுரை மண்ணில் சிவபெருமான் நிகழ்த்திய 64 திருவிளையாடல்களில் சிவபெருமான் விறகு விற்றது, நரியை பரியாக்கியது, மாணிக்கம் விற்றது, நாரைக்கு மோட்சம் வழங்கியது, பிட்டுக்கு மண் சுமந்த லீலை போன்ற 10 திருவிளையாடல்கள் நிகழ்வின்போது, மீனாட்சி அம்மனும், சொக்கநாதர் சுவாமியும் ஆடி வீதிகளில் எழுந்தருளினர்.
இவை அனைத்தும் பக்தர்களுக்கு அனுமதி இன்றி நடைபெற்று முடிவடைந்தன. இந்நிலையில், மீனாட்சி அம்மனும், சொக்கநாதர் சுவாமியும் சப்தாவர்ண சப்பரத்தில் எழுந்தருளி கோயில் ஆடிவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு நேற்று (ஆக. 21) அருள்பாலித்தனர்.
அரசு உத்தரவு
மேலும், கரோனா தடுப்பு நடவடிக்கையாக வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கோயிலுக்குள் வர அனுமதி இல்லை என்கிற தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி கோவில் ஊழியர்கள், காவல் துறையினர் ஆகியோர் மட்டும் இந்த திருவிழாவில் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: ’இந்துக்களே, திமுகவிடம் உஷாராக இருங்கள்’ - ஹெச்.ராஜா எச்சரிக்கை!