மதுரை: மீனாட்சி அம்மன் கோயிலில் ஏப்ரல் 5ஆம் தேதி கொடியேற்றத்துடன் சித்திரை திருவிழா தொடங்கியது. இதனையடுத்து, மதுரையின் அரசி மீனாட்சிக்கு பட்டாபிஷேகம் ஏப்ரல் 12ஆம் தேதி நடைபெற்றது. சித்திரை பெருவிழாவின் முக்கிய நிகழ்வான மதுரையின் அரசி மீனாட்சிக்கும் - சுந்தரேஸ்வரருக்குமான திருக்கல்யாணம் 2 ஆண்டுகளுக்கு பின்னர் வெகு விமரிசையாக பக்தர்கள் முன்னிலையில் நேற்று (ஏப்.14) நடைபெற்றது.
தொடங்கியது தேரோட்டம்: இதில், மதுரை மாவட்டம் மட்டுமின்றி, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் திரண்டனர். காலை 10.35 மணியில் இருந்து 10.59 மணிக்குள் திருக்கல்யாண நிகழ்வு நடைபெற்றது. இதனையடுத்து, சித்திரை திருவிழாவின் 11ஆம் நாளான இன்று (ஏப்.15) அம்மன் மீனாட்சியும் சொக்கநாதரும் மதுரை மாசி வீதிகளை வலம் வரும் தேரோட்ட நிகழ்வு தொடங்கியது.
மாசி வீதிகளில் தேர்: மீனாட்சி அம்மனும், சொக்கநாதரும் மதுரை மாசி வீதிகளில் குழுமியுள்ள லட்சக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் வகையிலான தேரோட்ட நிகழ்வு இன்று காலை 5.45 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. தேரடியில் இருந்து புறப்படும் அம்மன், சாமி தேர்கள் கீழமாசி வீதி, தெற்குமாசி வீதி, மேலமாசி வீதி, வடக்குமாசி வீதி வழியாக வலம் வந்து மீண்டும் தேரடி வந்து சேரும். இதன் பொருட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த நிகழ்வை காண பெரும் திரளாக கூடியுள்ளனர்.
முன்னதாக, மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், மதுரை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன், இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் உள்பட பலர் தேரோட்ட நிகழ்வை கொடியசைத்துத் தொடங்கிவைத்தனர். மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் நாளை (ஏப். 16) நடைபெறுகிறது.
இதையும் படிங்க: 'அலங்காரப் பிரியர் மட்டுமல்ல... சமத்துவ நாயகரும்கூட...' - கள்ளழகரின் மற்றொரு பக்கம்!