மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட தனியார் கல்லூரிகள் சங்கம் சார்பில் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
அதில், "மதுரை காமராசர் பல்கலைக்கழகம் 2006ஆம் ஆண்டு அனைத்து தனியார் கல்லூரிகளுக்கும் ஓர் தீர்மானத்தை அனுப்பியது.
அதில் தனியார் கல்லூரிகளில் செயல்படும் சுயநிதி பாடப் பிரிவுகளில் ஒரு பாடத்திற்கு, ஆண்டிற்கு ரூ.10 ஆயிரம் கட்டணமாகப் பல்கலைக்கழகத்திற்குச் செலுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தது.
இதனைப் பல்கலைக்கழக சிண்டிகேட் குழுவும் தீர்மானம் ஆக நிறைவேற்றியது. இதற்கு செனட் ஒப்புதல் மட்டும் பெற்று நடைமுறைப்படுத்தி உள்ளனர். ஆளுநரின் ஒப்புதல் பெறவில்லை. இது விதிமீறிய செயலாகும்.
எனவே, இந்த உத்தரவுக்குத் தடை விதிக்க வேண்டும்" என்று கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி பார்த்திபன் தேதி குறிப்பிடப்படாமல் தீர்ப்பை ஒத்தி வைத்திருந்தார். இந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
அதன்படி, மதுரை காமராசர் பல்கலைக்கழகம் தனியார் கல்லூரிகளில் செயல்படும் சுயநிதி பாடப் பிரிவுகளில் ஒரு பாடத்திற்கு ஆண்டிற்கு ரூ.10 ஆயிரம் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: A++: மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் சாதனையில் மற்றொரு மைல்கல்