மதுரை அமெச்சூர் கபடி கழகம் சார்பில், மாவட்டத்தைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் வீரர்களுக்கான கபடி போட்டி நேற்று மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் தொடங்கியது. முதல் நாள் போட்டியை மதுரை மாநகராட்சி ஆணையர் விசாகன் கலந்து கொண்டு தொடங்கி வைத்த நிலையில், இறுதிப் போட்டி நாளை மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது.
இந்தப் போட்டியில் பங்கேற்கும் அனைத்து வீரர்கள், வீராங்கனைகளுக்கும் ஒருலட்சம் ரூபாய் வரை இலவச விபத்து காப்பீட்டு திட்டம் வழங்கப்படுகிறது.
இதில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயதிற்கு மேற்பட்ட பள்ளி, கல்லூரி, தனியார் அமைப்புகள், கிராமப்புற இளைஞர் அமைப்புகள் என 100-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொள்கின்றன. ஆடவர் பிரிவில் முதல்பரிசை வெல்லும் அணிக்கு ரூ.30 ஆயிரமும், இரண்டாம் பரிசுப்பெறும் அணிக்கு ரூ.20 ஆயிரம் ரொக்கம் பரிசாக வழங்கப்படும். அதேபோல் பெண்கள் பிரிவில் முதல் இடம்பிடிக்கும் அணிக்கு ரூ. 20 ஆயிரமும், இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.10 ஆயிரமும் ரொக்கப் பரிசு, சான்றிதழும் வழங்கப்படவுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகத்தின் மாநிலத் தலைவரும், தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் துணைத் தலைவருமான சோலை ராஜா பேசுகையில், "கபடி வீரர்கள் பெரும்பாலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய கிராமத்தைச் சேர்ந்தவர்கள். விளையாட்டின் போது அடிபட்டு காயம் அடைந்தவர்கள் சிகிச்சை பெற பணம் இன்றி அவதிப்படுவது வழக்கமாக உள்ளது.
ஆகவே தான் ஒரு லட்சம் ரூபாய்க்கான இலவச விபத்து காப்பீட்டு திட்டம் அனைத்து வீரர்களுக்கும் வழங்கும் பொருட்டு இந்த கபடி போட்டியை நடத்துகிறோம். இதில் மதுரையை சேர்ந்தவர்கள் மட்டும் தான் பங்கேற்க முடியும். ஏற்கனவே அமெச்சூர் கபடி கழகம் சார்பில் கபடி வீரர்களுக்கு வேலைவாய்ப்பில் மூன்று சதவீத உள்ஒதுக்கீடு வாங்கி கொடுத்துள்ளோம். மேலும் மதுரை மாவட்டத்தைப் போல ஒவ்வொரு மாவட்டத்திலும் இது போன்று போட்டிகளை நடத்த முயற்சி மேற்கொள்வோம்" என தெரிவித்தார்.