திருநெல்வேலி: ஊட்டி நகராட்சி ஆணையராக இருந்த ஜஹாங்கீர் பாஷா என்பவர் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் சிக்கினார். கோயம்புத்தூர் ரயில் நிலையத்தில் வைத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை மடக்கி சோதனை செய்தபோது, கணக்கில் வராத ரூ.11.7 லட்சம் பணம் கட்டுகட்டாக வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து ஊட்டி நகராட்சி அலுவலகம் அழைத்து சென்று விசாரித்ததில் அந்த பணம் முறைகேடாக அவரது கையில் இருப்பது தெரியவந்தது. அதனையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்த நிலையில் இச்சம்பவம் நடைபெற்ற இரண்டே வாரத்தில் தற்போது ஜஹாங்கீர் பாஷா திருநெல்வேலி மாநகராட்சி உதவி ஆணையராக நியமிக்கப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, லஞ்ச ஒழிப்பு போலீசார் ஜஹாங்கீர் பாஷா மீது வழக்குப்பதிவு செய்து சுமார் 15 நாட்களே ஆன நிலையில் மீண்டும் அவருக்கு பொறுப்பு வழங்கப்பட்டிருப்பது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. வழக்கமாக இது போன்ற லஞ்ச ஒழிப்பு சோதனையில் சிக்கி வழக்குப்பதிவு செய்யப்பட்டால் பல்வேறு கட்ட விசாரணைக்கு பிறகே, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பொறுப்பு வழங்கப்படும்.
ஆனால், மிக குறுகிய காலத்தில் ஜஹாங்கீர் பாஷாவுக்கு மீண்டும் பொறுப்பு கிடைத்தது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது. குறிப்பாக, ஜஹாங்கீர் பாஷா ஏற்கனவே திருநெல்வேலி மாநகராட்சியில் பல ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார்.
இதையும் படிங்க : சுமார் ரூ.12 லட்சம் லஞ்சம்; சுத்துப் போட்டுப் பிடித்த லஞ்ச ஒழிப்புத் துறை!
திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பாளையம் மற்றும் பாளையங்கோட்டை மண்டலத்தில் உதவி ஆணையராக ஏற்கனவே இவர் பணியில் இருந்துள்ளார். கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு திருநெல்வேலி மாநகராட்சி சார்பில் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளை மாநகராட்சி பிடித்தபோது பாஜகவினர் மாநகராட்சி அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மாடுகள் அடைத்து வைக்கப்பட்டிருந்த அறையை திறந்துவிட்டு பிரச்சனையில் ஈடுபட்டனர். அப்போது ஜஹாங்கீர் பாஷா உதவி ஆணையராக பணியில் இருந்தார். அப்போது ஏற்பட்ட சர்ச்சையில் சிக்கிய நிலையில் தான் அவர் இங்கிருந்து பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
இந்நிலையில் கட்டுகட்டாக லஞ்ச பணம் சிக்கிய புகாரில் வழக்குப்பதிவுக்குள்ளான இவர் மீண்டும் அதே திருநெல்வேலி மாநகராட்சிக்கு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகம் சார்பில், திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் சுகபுத்ராவை தொலைபேசியல் தொடர்பு கொண்டு கேட்டபோது, "நேற்று மாலை தான் இந்த உத்தரவு எனக்கு கிடைத்தது. அரசு அவரை நியமித்துள்ளது விசாரித்து வருகிறோம். இதில் நான் முறையீடு செய்வதற்கு ஒன்றுமில்லை அரசாங்கம் தான் நியமன உத்தரவை வெளியிட்டுள்ளது. எனவே பொறுத்திருந்து பார்ப்போம்" என்று சுகபுத்ரா கூறினார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்