மதுரையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு குழந்தைகளை கடத்தி விற்பனை செய்த விவகாரத்தில் ரிசர்வ் லைன் அருகே உள்ள இதயம் அறக்கட்டளை என்ற தொண்டு நிறுவனத்தின் மீது புகார் எழுந்தது.
இதனையடுத்து காவல் துறை, சமூக நலத்துறையினர் களத்தில் இறங்கி அந்த அறக்கட்டளையின் பணிகள் குறித்து ஆய்வுகள் மேற்கொண்டனர். அங்கிருந்து தனி நபர்கள் சிலருக்கு குழந்தைகள் விற்கப்பட்ட விவகாரம் தெரியவந்ததை அடுத்து இதயம் அறக்கட்டளையின் நிர்வாகி சிவக்குமார், அவரது உதவியாளர் மதார்ஷா ஆகியோர் தலைமறைவாகினர்.
கரோனா தொற்று காரணமாக ஒரு வயது குழந்தை உயிரிழந்துவிட்டதாக பொய்யான ஆவணங்களுடன் நாடகமாடி குழந்தையை 2 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்தது தெரியவந்தது.
இவர்கள் இருவரையும் பிடிக்க தனிப்படை காவல் துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். கடந்த 29ஆம் தேதி தலைமறைவான இருவரும் தேனி மாவட்டம் போடிமெட்டு அருகே காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர்.