தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும், சார்பு ஆய்வாளர் ரகு கணேஷ் ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்தார். அந்த மனுவில் "சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் நான் உள்பட 9 பேர் மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளோம். இந்த வழக்கை ஆறு மாதங்களுக்குள் கீழமை நீதிமன்றம் விசாரித்து முடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் மீண்டும் கால அவகாசம் வழங்கப்பட்டு ஓராண்டு ஆகிவிட்டது.
அந்த வகையில் 20 மாதங்களுக்கும் மேலாக, நீதிமன்ற காவலில் சிறையில் வைக்கப்பட்டுள்ளேன். விசாரணை முடியும் வரை காவலில் வைத்திருப்பது சட்டவிரோதமானது. ஆகவே எனக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த மனு நீதிபதி முரளி சங்கர் அமர்வில் இன்று (மார்ச் 30) விசாரணைக்கு வந்தது.
அப்போது சிபிஐ தரப்பிலிலிருந்து, "ரகு கணேஷுக்கு ஜாமீன் கொடுக்கப்பட்டால், அவர் சாட்சிகளைக் கலைக்க வாய்ப்புள்ளது. வழக்கின் முக்கியத்துவத்தை கருத்தில்கொண்டு, ஜாமீன் வழங்கக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டது. இதைக்கேட்ட நீதிபதி, ஜெயராஜின் மனைவி தரப்பில் இடையீட்டு மனுவை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஏப்ரல் 5ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைதான காவலருக்கு ஜாமீன்