தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் தலைவர் ஜெகதீசன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல்செய்த பொதுநல மனுவில், "தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் வர்த்தக ரீதியாக தென் மாவட்டங்களில் பல முன்னேற்றங்களுக்கு உறுதுணையாக இருந்துவருகிறது.
சென்னைக்கு அடுத்தபடியாக மதுரை மாநகராட்சி அமைக்கப்பட்டது, ஆனால் இதுவரை மதுரை மாநகராட்சி எவ்வித முன்னேற்றத்தை அடையாமல் இருக்கிறது.
மேலும் நகர்ப்புற திட்டக்குழு 1971ஆம் ஆண்டு மாஸ்டர் பிளான் திட்டத்தை அமைத்தது. ஆனால் நகர்ப்புற திட்டக்குழு ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் வர்த்தக முன்னேற்றத்திற்கு ஏதுவாக மாஸ்டர் பிளான் திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும்.
2006ஆம் ஆண்டுமுதல் தற்போதுவரை மாஸ்டர் பிளான் திட்டம் எவ்வித மாற்றமின்றி உள்ளது. இதனால் மதுரை மட்டுமின்றி தென் மாவட்டங்கள் அனைத்தும் பெருமளவு பாதிப்புக்கு உள்ளாகிறது.
மாஸ்டர் பிளான் திட்டத்தின்படி மதுரை மாநகராட்சி செயல்பட்டால் மதுரை மட்டுமின்றி தென் மாவட்டங்களில் உள்ள ஊர்கள் அனைத்தும் பெரும் முன்னேற்றம் அடையும்.
மேலும் மதுரை விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக மாற்றப்பட்டு அனைத்து வசதிகளும் கிடைக்கும்.
வர்த்தக அளவில் தென் மாவட்டங்களிலிருந்து எளிதில் பொருள்கள் ஏற்றுமதி, இறக்குமதி செய்ய முடியும்.
இது தொடர்பாக உயர் அலுவலர்களுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே மதுரை மாஸ்டர் பிளான் திட்டத்தை நகர்ப்புற திட்ட விதியை பின்பற்றி மாற்றி அமைக்க அலுவலர்களுக்கு உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு குறித்து தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூன் மாதத்திற்கு ஒத்திவைத்தனர்.