மதுரையை சேர்ந்த புஷ்பவனம், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். அதில், 'இந்தியாவில் அரசு தொடர்புடைய பணிகளில் ஈடுபடும் நபர் பணி நடைபெறும் இடத்தில் திடீரென இறக்கும் நிலையில் அவரது குடும்பத்துக்கு யார் இழப்பீடு வழங்க வேண்டும், எவ்வளவு இழப்பீடு வழங்க வேண்டும் என்பதை முடிவு செய்யும் தீங்கியல் பொறுப்பு சட்டம் மற்றும் விதிகள் இன்னும் உருவாக்கப்படாமல் உள்ளது. இந்த சட்டத்தை கொண்டு வருமாறு ஒன்றிய அரசுக்கு பல்வேறு வழக்குகளில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் சட்ட ஆணையம் சட்ட முன்வடிவை தயாரிக்காமல் உள்ளது.
இந்தியாவின் சட்ட ஆணையத்தின் தலைவராக ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதியும், உறுப்பினர்களாக ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதிகள், சட்ட வல்லுனர்கள் இருப்பார்கள். ஆனால் தற்போது இந்திய சட்ட ஆணையத்துக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்படவில்லை.
எனவே, சட்ட ஆணையத்துக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமிக்கவும், இழப்பீடு தொடர்பாக விதிகளை உருவாக்கவும் உத்தரவிட வேண்டும்' என மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், “இந்தியாவில் நிலவும் தற்போதைய சூழ்நிலை அடிப்படையில் 6 மாதத்தில் தீங்கியல் பொறுப்பு மசோதாவை கொண்டு வர மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்.
இந்திய சட்ட ஆணையத்தை தனி அதிகாரம் மிக்க அமைப்பு அல்லது அரசியலமைப்பு அதிகாரம் கொண்ட அமைப்பாக உருவாக்குவது குறித்து மத்திய அரசு 6 மாதத்தில் முடிவெடுக்க வேண்டும், சட்ட ஆணையத்தின் ஆராய்ச்சி மற்றும் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த விரைவில் கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்.
இந்திய சட்ட ஆணையத்துக்கு 3 மாதத்தில் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமிக்க வேண்டும். தவறினால் மத்திய சட்டத்துறை முதன்மை செயலர், மத்திய சட்டத்துறை அமலாக்க பிரிவு செயலர் ஆகியோர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும், அனைத்து துறைகளிலும் சட்டத்தில் தகுதி பெற்றவரை நோடல் அலுவலராக நியமிக்க வேண்டும். இது தொடர்பாக கொள்கை முடிவெடுக்க வேண்டும்' என தங்கள் உத்தரவில் கூறியுள்ளனர்.