மதுரை, ராமநாதபுரம் உள்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் பலர் ஒண்றிணைந்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றினைத் தாக்கல்செய்திருந்தார்.
அதில், "2020ஆம் ஆண்டு நடக்க வேண்டிய பொது மாறுதல் கலந்தாய்வு கரோனா தொற்று பரவல் காரணமாக நிறுத்தப்பட்டது. தற்போது பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடத்துவதற்கு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்தாமல், பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடத்தினால் பலருக்கு உரிய இடம் கிடைக்காத நிலை ஏற்படும். எனவே பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடத்த தடைவிதிக்க வேண்டும். பொது மாறுதல் கலந்தாய்வு நடத்திய பிறகு பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.எஸ். ரமேஷ், "மூத்த தலைமை ஆசிரியர்கள் பலர் பொது கலந்தாய்வுக்கு காத்திருக்கக்கூடிய சூழலில் தற்போது பதவி உயர்வு பெறக்கூடிய தலைமை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நடத்துவது ஏற்கத்தக்கது அல்ல" என்று கருத்து தெரிவித்தார்.
தொடர்ந்து தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வுக்கு இடைக்காலத் தடைவிதித்து உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கு விசாரணை பிப்ரவரி 24ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆட்சியரகத்தில் தூய்மைப் பணியாளர் தற்கொலை: உடற்கூராய்வு அறிக்கை தாக்கல்செய்ய உத்தரவு!