மதுரை: கரூர் மாவட்டம், புஞ்சைகாளகுறிச்சியை சேர்ந்த சுப்ரமணியன், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், "கரூர் மாவட்டம், புஞ்சைகாளகுறிச்சிபகுதி அமராவதி ஆற்றின் கிழக்கு பக்கமாக அமைந்துள்ளது. அமராவதி ஆறு புஞ்சைகளகுறிச்சி மற்றும் சுற்று வட்டார கிராமங்களுக்குக் குடிநீர் ஆதாரமாகச் செயல்பட்டு வருகிறது.
கடந்த சில ஆண்டுகளாக அமராவதி ஆற்றில் இருந்து மாட்டு வண்டி மற்றும் இதர வாகனங்கள் மூலம் ஆற்றிலிருந்து மணல் திருடி வருகின்றனர். இதனால், இயற்கை சூழல் பாதிக்கப்படுகிறது. மேலும் அப்பகுதி மக்களுக்குக் குடிநீர் பிரச்சினை ஏற்படும் சூழல் உருவாகிறது.
அமராவதி ஆற்றில் மணல் திருட்டில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, அமராவதி ஆற்றில் மாட்டு வண்டி மற்றும் மற்ற வாகனங்கள் மூலமாக மணல் திருட்டு நடைபெறுவதைத் தடுக்கவும், மணல் திருட்டில் ஈடுபடுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள், கிருஷ்ணகுமார், கிருஷ்ணன் ராமசாமி அமர்வு முன்பு நேற்று (மே.11) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், கரூர் மாவட்ட ஆட்சியர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை அடுத்த மாதம் ஜூன் 7ஆம் தேதி ஒத்தி வைத்தனர்.
இதையும் படிங்க: விடுதலை மனு- முதல்வருக்கே தெரியாமல் நிராகரிப்பா?