திருச்சி கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாமில் தங்கியிருக்கும் ஜெகதீஸ்வரன், யோகேஸ்வரன் உள்ளிட்ட 65 அகதிகள் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் 2009ஆம் ஆண்டு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர்.
அதில், "தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட தங்களின் மூதாதையர்கள் ஆங்கிலேயே ஆட்சி காலத்தில் பிழைப்புக்காக இலங்கை சென்றனர். பின்னர் 1983ஆம் ஆண்டு இலங்கையில் இனக் கலவரம் மூண்டதால் உயிருக்கு பயந்து தமிழ்நாட்டிற்கு திரும்பினோம். உரிய பயண ஆவணங்கள் இல்லாமல் சட்டவிரோதமாக படகுகளில் வந்ததால் அகதிகள் முகாமில் தங்கவைக்கப்பட்டோம்.
இந்திய குடியுரிமை கேட்டு மத்திய, மாநில அரசுகளுக்கு தொடர்ந்து மனு அளித்துவருகிறோம். இருப்பினும் எங்களுக்கு குடியுரிமை சான்று வழங்கவில்லை. எங்களை அகதிகளாக கருதாமல், தாயகம் திரும்பியவர்களாக கருதி இந்திய குடியுரிமை வழங்க உத்தரவிட வேண்டும்" என குறிப்பிட்டிருந்தனர்.
இந்த மனு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு சார்பில், "மனுதாரர்கள் 1983 முதல் 1985 வரை இந்தியா வந்தவர்கள். தமிழ்நாடு வந்த இலங்கை அகதிகள் கொட்டப்பட்டு, மதுரை, பெரம்பலூர், கரூர், மண்டபத்தில் உள்ளனர். மனுதாரர்களுக்கு வீட்டு உபயோகப் பொருட்கள், நியாய விலைக்கடை பொருட்கள், தங்குமிடம், உடை, இலவசக் கல்வி வழங்கப்படுகிறது.
இவர்களை அகதிகளாகவே கருதுகிறோம். இந்திய குடியுரிமையைப் பொறுத்தவரை சட்டவிரோதமாக குடியேறியவர்கள் குடியுரிமைப் பெற தகுதியானவர்கள் அல்ல. மனுதாரர்களுக்கு தமிழ்நாட்டில் நிரந்தர வசிப்பிடம், நீண்ட நாள் விசா இல்லை, சட்டப்பூர்வ கடவுச்சீட்டில் இந்தியா வரவில்லை என்பதால் இவர்கள் குடியுரிமை கோர முடியாது" எனத் தெரிவிக்கப்பட்டது.
இது தவிர மத்திய அரசு சார்பில், "இந்தியாவிற்கு 1983-க்கு பிறகு இலங்கையில் இருந்து சட்டப்பூர்வமான பயண ஆவணங்களுடன் வந்தவர்கள் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம். சட்டவிரோதமாக இந்தியா வந்தவர்கள் சட்டவிரோத குடியேறிகளாகவே கருதப்படுவர். இவர்கள் இந்திய குடியுரிமை பெற தகுதியற்றவர்கள். மேலும் மனுதாரர்களின் இந்திய குடியுரிமை சான்று கேட்டு அனுப்பிய விண்ணப்பம் மத்திய அரசுக்கு வரவில்லை. மனுதாரர்கள் அனைத்து நிபந்தனைகளையும் பூர்த்தி செய்தாலும் இந்திய குடியுரிமையை தங்களின் உரிமையாக கோர முடியாது" எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதி, 'மனுதாரர்களின் நிலை திரிசங்கு சொர்க்கமாக உள்ளதை பார்க்கும்போது என் இருதயத்தில் ரத்தம் கசிகிறது. இருப்பினும் நீதித் துறையின் லட்சுமண ரேகையைத் தாண்ட முடியாது. குடியுரிமை வழங்குவது மத்திய அரசு சார்ந்தது. அது தொடர்பாக மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியாது.
இதனால் மனுதாரர்கள் இந்திய குடியுரிமை கேட்டு புதிதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்களிடம் விண்ணப்பிக்க வேண்டும். ஆட்சியர்கள் தாமதமின்றி அந்த விண்ணப்பங்களை மத்திய அரசுக்கு அனுப்பிவைக்க வேண்டும்.
மத்திய அரசு அந்த விண்ணப்பங்கள் மீது 16 வாரத்தில் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். மனுதாரர்களின் விண்ணப்பத்தை பரிசீலிக்கும் போது மனுதாரர்கள் உயிருக்கு பயந்து இந்தியா வந்தவர்கள் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் நுழைவுஇசைவுக்காக (விசா) காத்திருக்க முடியாது. இவற்றை கருத்தில் கொண்டு மனுதாரர்களின் விண்ணப்பம் மீது மத்திய அரசு முடிவெடுக்க வேண்டும்' என உத்தரவு பிறப்பித்தார்.