திருநெல்வேலியை சேர்ந்த கிரகாம்பெல் என்பவர் தனியார் மருத்துவக்கல்லூரிகளின் கட்டணம் தொடர்பாக தொடர்ந்த வழக்கில், ” தமிழக மாணவர்களில் 40% பேர் அரசு பள்ளிகளில் பயின்றவர்கள். 7.5% மருத்துவ இடங்கள் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால், அரசு பள்ளிகளில் பயின்ற ஏழை எளிய மாணவர்களில் நூற்றுக்கணக்கானோருக்கு தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
ஆனால், அதிகப்படியான கட்டண நிர்ணயத்தால் மாணவர்கள் தங்கள் படிப்பையே கைவிடும் சூழ்நிலை உருவாகியுள்ளது. எனவே தனியார் மருத்துவக் கல்லூரிகளின் அதிக கல்வி கட்டண நிர்ணயத்தை ரத்து செய்து, குறைத்து நிர்ணயிக்க உத்தரவிட வேண்டும் ” எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்த போது, ” கல்வி கட்டணங்களை தனியார் மருத்துவக் கல்லூரிகள் தங்களது உள்கட்டமைப்பு வசதிகளை வைத்து நிர்ணயம் செய்கிறது. மேலும், உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கல்வி கட்டண நிர்ணயம் குறித்து குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆகவே, உச்ச நீதிமன்றம் அமைத்த குழுவில் உயர் நீதிமன்றம் தலையிட முடியாது ” எனக்கூறி வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: பிஎட் படிப்பில் சேர இணையவழி கலந்தாய்வு!