தேனியை சேர்ந்த வழக்கறிஞர் ராஜா உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், "பெரியகுளம் உரிமையியல் நீதிமன்றத்தில் ஆரிப் ரகுமான் என்பவர் அரசு வழக்கறிஞராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதால், இந்த நியமனத்தை ரத்து செய்ய வேண்டும்" என குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது காவல்துறை கண்காணிப்பாளர் தரப்பில், ஆரிப் ரகுமான் மீது பதியப்பட்ட வழக்குகளில் பல வழக்குகள், தவறுதலாக பதியப்பட்டவை. சில வழக்குகள் முன்விரோதம் காரணமாக பதியப்பட்டவை என்று தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதி, பொதுவாக அரசு வழக்கறிஞர் நியமனத்தின் போது, அவர்களது நடத்தை, தகுதி, கல்வித்தரம், அப்பதவிக்கு பொருத்தமானவரா? என்பது குறித்து முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும். அரசு வழக்கறிஞராக நியமிக்கப்படுபவர்கள், நேர்மையாகவும், நன்னடத்தையுடன் இருப்பது மிகவும் அவசியம்.
இதுபோன்று, விசாரிக்கப்பட்ட பின்னரே பணியமர்த்த வேண்டும். இப்படி விசாரிக்காமல் பெரியகுளம் உரிமையியல் நீதிமன்ற அரசு வழக்கறிஞர் ஆரிப் ரகுமான் நியமனம் செய்யப்பட்டுள்ளதால், நியமனம் ரத்து செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.
இதையும் படிங்க: தமிழ்நாடு பிரஸ் கவுன்சில் அமைக்கும் உத்தரவை திரும்பப் பெற்றது சென்னை உயர்நீதிமன்றம்