மதுரை: மஞ்சணக்கார தெருவை ஒட்டி அமைந்துள்ள சிங்காரத்தோப்பு மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் தேசிய விவசாய நாளை முன்னிட்டு, அங்குப் பயிலும் மாணவர்கள் தங்களது தலைமை ஆசிரியர் ஜோசப் ஜெயசீலன் வழிகாட்டுதலின்படி இன்று (டிசம்பர் 23) நாற்று நட்டு விவசாயம் குறித்து அறிந்துகொண்டனர்.
சுமார் 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிலும் இந்த நடுநிலைப் பள்ளியில், பல்வேறு நல்ல செயல்பாடுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. அதன் தொடர்ச்சியாக இன்று நடைபெற்ற நாற்று நடுதலில் பள்ளி குழந்தைகள் பெரும் ஆர்வத்தோடு பங்கேற்று மகிழ்ந்தனர்.
தலைமை ஆசிரியரின் முன்னெடுப்பு
இது குறித்து, தலைமை ஆசிரியர் ஜோசப் ஜெயசீலன் கூறுகையில், "நமது நாட்டின் முதுகெலும்பாகக் கருதப்படும் விவசாயம் குறித்தும், விவசாயிகள் குறித்தும் இளம் தலைமுறையினர் அறிந்துகொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் நாங்கள் இந்த முயற்சியை மேற்கொண்டோம்.
இதற்காக கடந்த 19ஆம் தேதி வயல்வெளி போன்ற அமைப்பில் பெட்டி ஒன்றைத் தயாரித்து அதில் மண்ணுடன் நீரை நிரப்பி விதைநெல் தூவினோம். அந்த விதை நெல் இன்று நாற்றாக முளைத்திருந்தது. அதனைப் பிடுங்கி வேறொரு இடத்தில் நட்டு வளர்க்க மாணவர்கள் ஆர்வத்துடன் செயல்பட்டனர்" என்றார்.
மேலும் அவர் கூறுகையில், இதுபோன்ற சின்ன சின்ன விஷயங்கள் மூலமாக குழந்தைகளுக்கு விவசாயத்தின் மீதான நாட்டத்தை ஏற்படுத்த முடியும் என நாங்கள் நம்புகிறோம். குழந்தைகளின் பெற்றோர்கள் இதனை மனமுவந்து வரவேற்றுள்ளனர் என்றார்.
இதையும் படிங்க: மதுரை வளர்ச்சிக் குழும தற்காலிக அமைப்பு - அரசு ஆணை