மதுரை: உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இதன் மூன்றாம் நானான நேற்று (ஏப். 07) காமதேனு வாகனத்தில் மீனாட்சி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் காட்சி நடைபெற்றது.
மதுரை மாநகரில் சித்திரைப் பெருந்திருவிழா களை கட்டியுள்ள நிலையில், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மூன்றாம் நாளான நேற்று மீனாட்சி - சுந்தரேஸ்வரர் கைலாச பர்வதம் - காமதேனு வாகனத்தில் மாலை 7 மணிக்கு தொடங்கி மாசி வீதிகளை வலம் வந்தனர்.
3ஆம் நாளின் தத்துவ விளக்கம்: வெகு திரளாக குழுமியிருந்த பக்தர்கள் நடுவே வலம் வந்து அம்மனும், சுவாமியும் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். மூன்றாம் நாள் திருவிழா என்பது மூவினையும், முப்புத்தியும், முக்குணமும், மும்மலமும், முப்பிறப்பும், முக்குற்றமும், முப்பற்றும் முதலானவற்றை ஒழித்தற் பொருட்டாகும். ராவணனின் உடம்பின் மேலுள்ள கைலாச பர்வதத்தில் இறைவன் எழந்தரும் நிகழ்வு நடைபெற்றது.
இவ்வாகனம் கைலாச பர்வத வாகனம் எனக் கூறப்படும். 'ராவணன் ஆணவ மலம் முதிர்ந்த ஜீவாத்மா. அகங்காரத்தால் எதுவும் செய்யக் கூசாதவன். அவன் தனது திமிரால் கைலாச பர்வதத்தைத் தூக்கி எடுக்க, சிவபெருமான் கால்விரலை ஊன்ற, அவன் அலறி கை நரம்பால் வீணை உண்டாக்கி சாமகானம் பாடினான்' என நம்பப்படுகிறது.
இறைவன் மகிழ்ந்து அவனுக்கு அருள்புரிந்தார். இது ஸ்திதி அல்லது காப்பாற்றுதலைக் குறிக்கும். இதிலிருந்து, இறைவனுக்கு தீங்கு செய்தவர்களும் அடங்கி நின்று வழிபடுவாராயின் அவனுக்கும் இறைவன் அருள்புரிவான் என்பதும், அவனது பெருந்தகைமையும் நன்கு விளங்குகின்றது என்பது இம்மூன்றாம் நாளின் தத்துவ விளக்கமாகும்.
இதையும் படிங்க: 'சித்திரைத் திருவிழாவின் 3ஆம் நாள்: தங்க சப்பரத்தில் அன்னை மீனாட்சி!'