மதுரை: ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் காவல் நிலையத்திற்குள்பட்ட பகுதியைச் சேர்ந்தவர் மலைச்சாமி. அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணுடன் நெருக்கமாகப் பழகிவந்துள்ளார்.
மேலும் அவரைத் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி, பல நாள்கள் அப்பெண்ணுடன் உடலுறவு கொண்டுள்ளார். இதையடுத்து கர்ப்பமான அந்த இளம்பெண் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கேட்டதற்கு மலைச்சாமி மறுத்துவிட்டார்.
பின்னர் இந்தச் சம்பவம் குறித்து அந்தப் பெண், தனது பெற்றோரிடம் தெரிவித்த நிலையில், அவர்கள் அபிராமம் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இந்தப் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், மலைச்சாமியைக் கைதுசெய்தனர்.
இதற்கிடையே கர்ப்பிணியாக இருந்த அந்தப் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்த வழக்கை விசாரித்த ராமநாதபுரம் மாவட்ட மகளிர் நீதிமன்றம் மலைச்சாமிக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து மலைச்சாமி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை நீதிபதி பொங்கியப்பன் விசாரித்தார்.
முடிவில், பாதிக்கப்பட்ட இளம்பெண்ணிடம் பொய்யான வாக்குறுதியை அளித்து, அவருடன் உடலுறவு வைத்திருந்தது உறுதியாகிறது. ஆனாலும் இது பாலியல் வன்புணர்வாக எடுத்துக் கொள்ள தேவையில்லை.
எனவே 10 ஆண்டு சிறை தண்டனையை மனுதாரர் அனுபவிக்கத் தேவையில்லை. பெண்ணை ஏமாற்றிய மனுதாரருக்கு இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 417 இன்படி ஓராண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது.
இந்த விஷயத்தில் உண்மையிலேயே பாதிக்கப்பட்டுள்ளது இவர்களுக்கு பிறந்த குழந்தைதான். எனவே மனுதாரர் அந்தக் குழந்தை பெயரில் ஐந்து லட்சம் ரூபாயை மூன்று மாதத்திற்குள் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் டெபாசிட் செய்ய வேண்டும். மனுதாரரை உடனடியாகக் கைதுசெய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க:பெங்களூரு சிறையிலிருந்து விடுதலையானார் சுதாகரன்!