தூத்துக்குடி மாவட்டம், சிவலூரைச் சேர்ந்த முருகேசன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொது நல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில்," தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் கிராமங்கள் கடலோர கிராமங்கள் உள்ளன. உடன்குடி தாலுகாவிற்கு உட்பட்ட இந்த கிராமங்களில் இயற்கை நீர்வள ஆதாரங்களாக திகழும் குளங்களில் சவுடு மண் எடுப்பதாக அனுமதி பெற்று மணல் எடுக்கின்றனர்.
உயர் நீதிமன்ற மதுரைக்கிளை சவுடு மணல் எடுக்க அனுமதிக்கக்கூடாது என உத்தரவிட்டுள்ள நிலையில், இதுபோன்று அனுமதி வழங்கப்படுவது ஏற்கத்தக்கதல்ல. ஆகவே, தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறும் மணல் கடத்தலை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்யநாராயணன், ராஜமாணிக்கம் ஆகியோர் அடங்கிய அமர்வில், சட்ட விரோத மணல் கடத்தல்களை தடுக்கக்கோரி தொடர்ச்சியாக வழக்கு தாக்கல் செய்யப்பட்ட வண்ணம் உள்ளன. ஆகையால், இவ்வழக்கில் தமிழ்நாடு தலைமைச் செயலர், தொழில் துறையின் முதன்மைச் செயலர் ஆகியோரை தானாக முன்வந்து வழக்கில் எதிர் மனுதாரராக சேர்த்து உத்தரவிட்ட நீதிபதிகள், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரும், காவல்துறை கண்காணிப்பாளரும் உடன்குடி பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதிகளில் மணல் எடுப்பது தொடர்பாக உரிய ஆவணங்களுடன் பதில் மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும்.
மேலும் மணல் கடத்தல் தொடர்பாக இதுவரை எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன?அந்த வழக்குகளின் விசாரணை நிலை என்ன?என்பது தொடர்பாக பதில் மனுக்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, நீதிமன்றத்தின் பொறுமையை சோதிக்க வேண்டாம் என்ற கருத்தையும் பதிவு செய்து வழக்கின் விசாரணையை செப்டம்பர் 8 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.