அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 விழுக்காடு உள்ஒதுக்கீடு அடிப்படையில் தனக்கு ஒரு பி.டி.எஸ் சீட் ஒதுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்து பரமக்குடி பிடாரிசேரியைச் சேர்ந்த கார்த்திகா ஜோதி என்ற மாணவி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றினைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில்,"என் தந்தை சுமைத் தூக்கும் தொழிலாளி. தாயார் விவசாய கூலித் தொழிலாளி. நீட் தேர்வில் தேர்ச்சிப்பெற்ற எனக்கு அரசு பள்ளி மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு வழங்கிய 7.5 விழுக்காடு உள் இடஒதுக்கீடு அடிப்படையில், தனியார் மருத்துவக் கல்லூரி ஒன்றில் பி.டி.எஸ்., மருத்துவப் படிப்பில் சேர வாய்ப்பு கிடைத்தது. இருப்பினும், கல்விக் கட்டணம் கட்ட முடியாத காரணத்தால் என்னால் கல்லூரியில் சேர முடியாத நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் தனியார் மருத்துவக்கல்லூரியில் சீட் கிடைத்த அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை அரசே செலுத்தும் என தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இந்த அறிவிப்பின் அடிப்படையில், பி.டி.எஸ் படிப்பில் சேர எனக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும். அதுவரை எனக்காக ஒரு பி.டி.எஸ் சீட்டை காலியாக வைத்திருக்க உத்தரவிட வேண்டும்" என கோரியிருந்தார்.
இந்த மனுவானது, மதுரைக் கிளை நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் தலைமையிலான அமர்வின் முன்பாக இன்று(டிச.24) விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுவை ஆராய்ந்த நீதிபதி,"தனியார் மருத்துவ கல்லூரியில் சீட் கிடைத்த அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை அரசே செலுத்தும் என்ற தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்பு பாராட்டிற்குரியது. ஆனால், இந்த அறிவிப்பானது கல்விக் கட்டணம் கட்ட முடியாத காரணத்தால் மனுதாரர் பி.டி.எஸ். சீட்டை மறுத்த மறுநாள் வந்துள்ளது. தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்பின் பலனை மனுதாரரை போன்றவர்கள் அனுபவிக்க வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.
எனவே, அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு ஒப்படைக்கப்பட்ட எம்.பி.பி.எஸ்.,/ பி.டி.எஸ்., சீட்களை இருப்பு மற்றும் மதிப்பெண் அடிப்படையில் மனுதாரரை போன்றவர்களுக்கு வழங்க அரசு முன்வர வேண்டும். மருத்துவ சீட்டுக்காக அதிக பணம் செலவு செய்பவர்கள் உயர் கல்விக்கு பிறகு பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக இருப்பார்கள். சேவையாற்ற முன்வரமாட்டார்கள்.
மனுதாரருக்காக ஒரு எம்.பி.பி.எஸ்/ பி.டி.எஸ் சீட் காலியாக வைத்திருக்க வேண்டும். அதேபோல, நீட் தேர்வில் வெற்றிப்பெற்ற மாணவர் டி.அருண், மாணவிகள் சவுந்தர்யா, கவுல்சயா ஆகியோருக்கும் தலா ஒரு எம்.பி.பி.எஸ்.,/ பி.டி.எஸ்., சீட்களை நிரப்பாமல் வைத்திருக்க வேண்டும்” என உத்தரவிட்டு விசாரணையை ஜனவரி 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க : கல்வி உதவித்தொகைக்கான தேர்வை ஒத்திவைக்க கோரிக்கை!