மதுரை: கல்லூரி மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வை நேரடித் தேர்வாக(Offline Exams) நடத்தவுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்தது. இதையடுத்து, மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள அமெரிக்கன் கல்லூரியின் இரண்டாம், மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு இன்று (நவ. 15) நேரடித் தேர்வுகள் நடைபெற இருந்தது.
இந்நிலையில், நேரடித் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி திடீரென ஆயிரக்கணக்கான மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் முதல்வர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேண்டும் ஆன்லைன் தேர்வுகள்
அதனைத் தொடர்ந்து, மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பேரணியாக வந்த மாணவர்கள் ஆன்லைனில் தேர்வுகள் (Online Exams) நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட மாணவர்களிடம் காவல் துறை, கல்லூரி நிர்வாகத்தினர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
பேச்சுவார்த்தையில் கல்லூரி நிர்வாகம் இன்று நடைபெறவிருந்த தேர்வை இரண்டு வாரத்திற்கு தள்ளிவைப்பதாக அறிவித்தது. இருப்பினும், மாணவர்கள் ஆன்லைன் தேர்வை நடத்தக்கோரி பதாகைகளை ஏந்தியும், கோஷங்களை எழுப்பியும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடரும் போராட்டம்
ஆன்லைன் வகுப்புகளே அதிகளவில் நடைபெற்றுள்ள நிலையில் நேரடி தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுவதாக கூறினர். இந்நிலையில் மாவட்ட ஆட்சியரிடம் மாணவர்கள் சார்பாக ஐந்து பேர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
தங்களது கோரிக்கை நிறைவேறும் வரை கலைந்து செல்லமாட்டோம் என கூறி மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறன்றனர். இதன் காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.
இதையும் படிங்க: மாணவியின் இறுதி ஊர்வலம் - கண்ணீர்விட்ட கோவை மக்கள்