மதுரை: தனியார் மருத்துவமனையில் உடல் நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த 292ஆவது மதுரை ஆதீனகர்த்தர் ஸ்ரீலஸ்ரீ அருணகிரி கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டின் மிகப் பழமைவாய்ந்த சைவ சமய மடங்களில் ஒன்று மதுரை ஆதீனம். இந்த மடம் சைவ சமயக் குரவர்களில் ஒருவராகக் கருதப்படும் திருஞானசம்பந்தரால் 1500 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டது. இம்மடத்தின் 292ஆவது ஆதீன கர்த்தராக இருப்பவர் அருணகிரிநாதர். இவர் முன்னாள் பத்திரிகையாளரும்கூட.
தஞ்சையில் உள்ள கஞ்சனூர் அக்கினீஸ்வரர் கோயில், திருப்புறம்பியம் சாட்சிநாதேஸ்வரர் கோயில், திருவாரூரில் உள்ள கச்சனம் கைச்சின்னேசுவரர் கோயில் ஆகியவை மதுரை ஆதீன மடத்திற்குச் சொந்தமானதாகும்.
மேலும் மதுரை ஆதீன மடத்திற்குச் சொந்தமாகப் பல்வேறு நிலங்கள் தமிழ்நாட்டிலும் இலங்கையிலும் தற்போதும் உள்ளன. இம்மடத்தின் 293ஆவது ஆதீன கர்த்தராக நித்யானந்தா கடந்த 2012ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியது. பல்வேறு தரப்பிலும் கிளம்பிய எதிர்ப்பை அடுத்து அந்த நியமனம் தற்போதைய ஆதீனகர்த்தர் அருணகிரியால் திரும்பப் பெறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
![மதுரை ஆதீனம் உடல்நிலை கவலைக்கிடம்!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-mdu-03-aadheenam-health-worried-script-7208110_12082021125735_1208f_1628753255_510.jpg)
அருணகிரிநாதர் கடந்த சில நாள்களுக்கு முன்பாக உடல்நலக்குறைவு காரணமாக மதுரை கே.கே. நகரில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் தற்போது அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்நிலையில் தருமை ஆதீனம் மதுரை ஆதீனத்தைப் பார்ப்பதற்காக அப்போலோ மருத்துவமனை வந்துள்ளார்.
இதையும் படிங்க: தமிழ்நாடு வரவு-செலவுத் திட்ட அறிக்கை: தொழில் துறை எதிர்பார்ப்புகள் என்ன?