கன்னியாகுமரி மாவட்ட மரபுசார் மீட்புக் குழுச் செயலர் கிருஷ்ணமணி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல்செய்திருந்தார். அந்த மனுவில், "கன்னியாகுமரி மாவட்ட கோயில்கள் 1956-க்கு முன்பாக திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்தது. மொழிவாரி மாகாணங்கள் பிரிக்கப்பட்ட பின்பு இந்தக் கோயில்கள் அனைத்தும் தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்கப்பட்டன.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கோயில்களுக்குச் சொந்தமான நிலங்களை அரசுப் புறம்போக்கு என்று வகைப்படுத்தி கோயில்களை அழித்து சீர்கேடுகளை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இருந்தது. இது குறித்து திருவிதாங்கூர் திவானாக இருந்த பத்மநாப ஐயர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தற்போது இந்தக் கோயில்களின் பசலி கணக்கெடுப்பு (ஜமாபந்தி) தற்பொழுது வருவாய்த் துறையால் நடைமுறைப்படுத்தப்பட்டுவருகிறது. இந்த ஜமாபந்திக்கு முன்பாக கோயில்களின் சொத்துகளை வரைமுறைப்படுத்தி இணையத்தில் ஏற்ற வேண்டும் என்று கோரிக்கைவிடுத்திருந்தோம்.
ஆனால் இதனை வருவாய்த் துறை அலுவர்கள் செயல்படுத்தவில்லை. எனவே நடப்பாண்டு ஜமாபந்திக்கு முன்பாக கோயில்களிந் சொத்துகள் குறித்து வரைமுறைப்படுத்தி இணையதளங்களில் ஏற்றுவதற்கு உத்தரவிட வேண்டும்" எனத் தெரிவித்திருந்தார்.
இந்த மனுவானது நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் முன்னிலையான வழக்கறிஞர், 70 விழுக்காடு விவரங்கள் இணையதளத்தில் ஏற்றப்பட்டதாகக் கூறினார்.
இதைக்கேட்ட நீதிபதிகள், இணையதளத்தில் கோயிலின் சொத்து விவரங்கள் 70 விழுக்காடு பதிவேற்றம் செய்ப்பட்டுள்ளன. மீதி விவரங்கள் இணையதளத்தில் ஏற்றும்வரை மனுதாரர் காத்திருக்க வேண்டும். அதில் கோயில் சொத்து குறித்து போதிய விவரங்கள் இல்லாத நிலையில், சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் மனு அளிக்கலாம். அதனை அலுவலர்கள் சட்டத்திற்குள்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி வழக்கைத் தள்ளுபடிசெய்தனர்.
இதையும் படிங்க: சவுடு மண் அள்ளப்படுவதால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆட்சியர்கள் பதிலளிக்க உத்தரவு