தமிழ்நாட்டில் 2011ஆம் ஆண்டு ஜூன் 29ஆம் தேதிக்கு முன்பு ஆசிரியர்களாக நியமிக்கப்பட்ட 9 பேர் ஆசிரியர் தகுதித் தேர்விலிருந்து விலக்குக்கோரி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுக்களைத் தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி டி.கிருஷ்ணகுமார், " தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறை 15.11.2011ல் பிறப்பித்த உத்தரவில் 2009ஆம் ஆண்டின் மத்திய இலவச கட்டாயக் கல்வி சட்டப்படி அனைத்து ஆசிரியர்களும் ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றிப்பெற வேண்டும்.
இது தொடர்பாக தேசிய ஆசிரியர் கல்வி கழகம் 23.8.2010ல் அறிவிப்பாணையையும், அதன் திருத்த உத்தரவை 29.07.2011 அன்றும் வெளியிட்டது. இந்த இடைப்பட்ட காலத்தில் ஆசிரியர்களாக நியமனம் செய்யப்பட்ட மனுதாரர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் இருந்து விலக்குக்கோரி நீதிமன்றம் வந்துள்ளனர்.
ஆசிரியர் தகுதித் தேர்வில் இருந்து விலக்கு கேட்பது மத்திய அரசின் இலவச கட்டாயக் கல்வி சட்டத்துக்கு எதிரானதாக இருக்காதா? மத்திய அரசின் இலவச கட்டாயக் கல்வி சட்டத்தில் இருந்து விலக்கு கேட்கும் மனுதாரர்கள் வழக்கில் மத்திய அரசை எதிர் மனுதாரராக சேர்க்கவி்லை. அப்படியிருக்கும் போது, இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததா? என்ற கேள்வி எழுகிறது. இதனால் இந்த வழக்கை உயர் நீதிமன்ற அமர்வு விசாரிப்பது தான் உகந்தது. எனவே நிர்வாக நீதிபதியிடம் அனுமதி பெற்று இந்த வழக்குகளை உயர் நீதிமன்ற அமர்வு முன்பு விசாரணைக்கு பதிவுத்துறை பட்டியலிட வேண்டும் என உத்தரவிட்டார்.