இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நோய்க் கிருமிகளை கையாளும் இடம் மருத்துவமனை. மருந்து கண்டறியப்படாத நோய்க் கிருமிகளை கையாளும் இடம் ஆய்வகம். ஆனால், இன்று அனைத்து மருத்துவமனைகளும் ஆய்வகங்களாக மாறி உள்ளன. இதனால் மருத்துவர்கள் எந்தவித பாதுகாப்பும் இல்லாமல், நிராயுதபாணியாக நோய்க் கிருமிக்கு முன்னால் நிறுத்தப்பட்டுள்ளனர்.
எந்தவொரு மனிதருக்கும் அவரது உயிரைவிட மேலான ஒன்றை அரசாங்கம் ஊதியமாக தந்து விட முடியாது. அப்படி இருந்தும் மருத்துவர்கள் யாரும் இன்று வரை பின்வாங்கவில்லை. நியூயார்க் நகரில் எண்ணிலடங்காத உயிர்களை கரோனா தின்று கொண்டிருக்க, அங்கு முக்கியப் பொறுப்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் இரவு பகலாக வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். அவரின் வேகம் எதை நோக்கியது? என்று நினைக்கும் போது மனம் நடுங்குகிறது.
மதுரை அரசு ராசாசி மருத்துவமனை முதல்வரோடு பேசிக்கொண்டிருந்தேன். அப்போது அவர் சொன்னார். “இப்பொழுது இதனை நாம் செய்துதானே ஆக வேண்டும். கர்நாடகாவில் மருத்துவ முதுகலை படிக்கும் என் மகளுக்கும் கோவிட் வார்டில்தான் பணி. அவருக்கு நான் சொன்ன ஒரே வார்த்தை ’ தற்கவச ஆடைகள் அணிவதில் கவனக்குறைவாக இருந்துவிடாதே என்பது மட்டும் தான்”
மருத்துவ அறமும் மனிதத்தன்மையுமே இன்று அனைத்து போதாமைகளுக்கு நடுவிலும் மருத்துவர்களை செயலாற்ற வைத்துக் கொண்டிருக்கிறதே தவிர மற்ற படி அரசின் சட்டவிதிகளோ, சலுகைகளோ அல்ல. ஆனால், இந்த புதிய சூழலையை புரிந்து கொண்டு அரசுகளும் சமூகமும் தம்மை மாற்றிக் கொண்டுள்ளனவா?
மருத்துவரின் உடல் கொண்டுவரப்பட்ட ஆம்புலன்ஸ் இடுகாட்டில் வைத்து அடித்து நொறுக்கப்படுகிற அளவுக்கு நிலைமை இருப்பதை அரசால் ஏன் முன்பே உணர முடியவில்லை. கரோனா காலத்தில் கூட அமைச்சர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு சுமார் 700 காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். ஆனால் ஒரு மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்புத் தெரிவித்து ஊடகங்களில் செய்தி வெளிவந்த பின்பும் அடுத்த மருத்துவரின் இறுதி நிகழ்ச்சிக்கு பாதுகாப்போ, முறையான ஏற்பாடோ செய்ய வேண்டும் என்பது ஏன் இவர்களுக்கு தெரிவதில்லை?
இறந்தவர் உடலில் இருந்து வைரஸ் தொற்று பரவாது என்று அரசு சொன்ன பின்பும் மக்கள் ஏன் நம்ப மறுக்கிறார்கள் என்று அப்பாவித் தனமாக கேள்வி எழுப்ப முடியாது. விரைவாகச் சோதனை செய்யும் ”கிட்” விசயத்தில் உண்மைக்கு மாறாக தகவல்கள் வெளியிடப்படுகின்றன. எனவே ஒரே நாளில் அரசை முழுமையாக நம்புங்கள் என்று சொன்னால் எப்படி மக்கள் நம்புவார்கள்?
கரோனா பற்றிய தவறான புரிதல்கள் பெரும் இரும்புச்சுவர்களால் கட்டியெழுப்பப்பட்டுள்ளன. எனவே அபாயம் தம்மை நெருங்குகிறது என்று மனிதன் நம்பத் தொடங்குகிறான். அவற்றிலிருந்து தப்பிக்க வேண்டும் என்று உந்தித் தள்ளப்படுகிறான். எனவே அவன் சமூகத்தின் அனைத்து கட்டமைப்புகளின் மீதான நம்பிக்கையை உதறிவிட்டு முழுக்க முழுக்க தனிமனிதனாக மாறி நிற்கிறான்.
மனிதன் மரணிக்கலாம். ஆனால் பல்லாயிரம் ஆண்டுகால வாழ்வில் சேகரித்து வைத்துள்ள மனிதத்தன்மை மரணித்து விடக்கூடாது", என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: அதிகரிக்கும் கரோனா - அச்சத்தில் பத்திரிகையாளர்கள்!