மதுரை நாராயணபுரம் சிவமணி தெருவில் வசித்த பொறியியல் பட்டதாரியான சுபாஷினி, மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ராஜமாணிக்கம் என்பவரது மகன் முத்துசங்கு என்ற காவலரை 2019ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.
முத்துசங்கு, தாம் சார்பு ஆய்வாளராகப் பணிபுரிவதாகப் பொய் கூறி தன்னை திருமணம் செய்துகொண்டதாகவும், திருமணத்தின்போது வரதட்சணையாக ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம், 25 பவுன் தங்க நகைகள் தன் பெற்றோர் வழங்கியதாகவும் சுபாஷினி கூறியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து திருமணமான மூன்று மாதத்தில் மேலும் வரதட்சணை பணம் கேட்டு கொடுமைப்படுத்தி உள்ளார் முத்துசங்கு. இதனைத் தொடர்ந்து இருவரும் பிரிந்து தனித்தனியாக வாழ்ந்துவந்துள்ளனர்.
மேலும், காவலர் முத்துசங்கு மீது தல்லாகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 2020ஆம் ஆண்டு புகார் செய்யப்பட்டது. ஆனால், முன்னாள் அமைச்சர் ஒருவருக்குப் பாதுகாப்புப் பணியில் இருப்பதாகக் கூறி புகாருக்குப் பதில் கூறாமல் இருந்ததாக சுபாஷினி தெரிவித்தார்.
இந்நிலையில், மீண்டும் காவலர் முத்துசங்கு தனது பெற்றோருடன் கடந்த பத்து நாள்களுக்கு முன்பு பேச்சுவார்த்தை நடத்தினர் என்றும், இதனை நம்பி கணவருடன் சென்ற தன்னை பல்வேறு வகையில் பாலியல் துன்புறுத்தல் செய்தார் எனவும் குற்றஞ்சாட்டினார்.
அவரது மொபைல் போனை சுபாஷினி ஆய்வு செய்தபோது, பல பெண்களுடன் ஆபாசமாகப் பேசியது, ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பியது, ஆபாசமான படங்களையும் காணொலிகளையும் பல பெண்களுக்கு ஷேர் செய்து பேசி வந்துள்ளது தெரியவந்ததாக சுபாஷினி தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து சுபாஷினி நேற்று(ஜூன் 21) மதுரை மாநகர காவல் ஆணையரிடம் பாலியல் ரீதியாக துன்புறுத்தும் கணவர் முத்துசங்கு மீது தக்க நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
இதையும் படிங்க: கறுப்பு பூஞ்சை தாக்குதலால் மதுரையில் 301 பேர் பாதிப்பு!