மதுரை: உலகப்புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் திருக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழாவில் கோயிலின் வளாகத்தில் அமைந்துள்ள முக்குறுணி விநாயகருக்கு 18 படி பச்சரிசியில் கொழுக்கட்டை படைக்கப்படுவது வழக்கம்.
அதன்படி 18 படி பச்சரிசியில் வெல்லம், தேங்காய், கடலை, எள், ஏலக்காய், நெய் கலந்து கொழுக்கட்டை தயார் செய்யப்பட்டு முக்குறுணி விநாயகர் சந்நிதியில் கொழுக்கட்டை வைக்கப்பட்டு சிறப்புப் பூஜைகள், அபிஷேக, ஆராதனைகள் நைவேத்தியம் செய்யப்பட்டது.
தமிழர் அளவை முறை, பிற அளவை முறையிலிருந்து மிகவும் மாறுபட்டதாகும். ஒரு குறுணி என்றால் ஆறு படி என்ற கணக்கில், முக்குறுணி விநாயகருக்கு 18 படி பச்சரிசி மாவால் ஆன கொழுக்கட்டை ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி நாளன்று படைப்பது வழக்கம். விநாயகர் சதுர்த்தி அன்று முக்குறுணி விநாயகருக்கு வெள்ளியாலான கவசம் உடலில் சார்த்தப்பட்டு வழிபாடு செய்யப்படுகிறது.
மதுரையை கடைசியாக ஆண்ட நாயக்க மன்னர்களுள் குறிப்பிடத்தகுந்தவராகக் கருதப்படும் திருமலை நாயக்கர், தான் ஆட்சிப் பொறுப்பேற்ற (கிபி.1623ஆம் ஆண்டு) முதலாமாண்டில் அன்றைய மதுரையின் புறநகர்ப் பகுதியான இன்றைய வண்டியூர் மாரியம்மன் கோயில் அருகே தெப்பக்குளம் ஒன்றை உருவாக்க உத்தரவிடுகிறார்.
அக்குறிப்பிட்ட தெப்பக்குளம் உருவாக்குவதற்காக பள்ளம் தோண்டப்பட்டபோது 8 அடி உயர விநாயகர் சிலை கண்டெடுக்கப்பட்டதாகவும், பிறகு மன்னர் இட்ட உத்தரவையடுத்து மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் இந்த விநாயகர் சிலை அமைக்கப்பட்டதாகவும் கோயில் தல வரலாறு கூறுகிறது. அத்தெப்பக்குளமே இன்று வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.
திருவாரூர் கமலாலய தெப்பக்குளத்திற்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டின் 2ஆவது பெரிய கோயில் தெப்பக்குளம் இதுவாகும்.
இந்த விநாயகருக்கு முக்குறுணிக் கொழுக்கட்டை படையல் கடந்த முன்னூறு ஆண்டுகளுக்கும் மேலாக விநாயகர் சதுர்த்தியன்று படைக்கப்படுவதாக கோயில் பட்டாச்சாரியர்கள் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: யானை கோயில் கட்டி வழிபடும் பழங்குடியினர் - விநாயகர் சதுர்த்தி சிறப்பு வழிபாடு