கீழடி ஐந்தாம் கட்ட அகழாய்வு நிறைவுக்கு வந்த நிலையில் அங்கு ஏறக்குறைய நான்கு ஏக்கர் நிலப்பகுதிகள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. அதில் ஒரு பகுதி நிலம் கீழடியை பூர்வீகமாகக் கொண்ட மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேராசிரியரும், கல்லூரி துணை முதல்வருமான முருகேசன் என்பவருக்கு சொந்தமானதாகும்.
இன்று நமது ஈடிவி பாரத் செய்திகளுக்காக அவர் வழங்கிய சிறப்பு நேர்காணலில், தனக்குச் சொந்தமான இடத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் உறைகிணறு, இரட்டைச் சுவர்கள், அகலமான செங்கலையுடைய வளைவான சுவர் பகுதி ஆகியவை கிடைத்துள்ளன எனவும், அதனை தமிழ்நாடு தொல்லியல்துறை விருப்பப்பட்டால் கள அருங்காட்சியகத்திற்கு எடுத்துக் கொள்ள முழு சம்மதம் தெரிவிப்பதாகவும் பேராசிரியர் முருகேசன் கூறினார்.
தமிழ் உணர்வின் அடிப்படையிலும், உலக தமிழ் மக்கள் இந்த இடத்தைக்கண்டு பயனுற வேண்டும் எனவும் இதற்கு முழுமையாக தனது ஒப்புதலை தெரிவிப்பதாக முருகேசன் கூறினார்.
முழு இடத்தையும் தருவதற்கு வசதி போதாது என்று கூறிய முருகேசன், விவசாய நிலம் என்பதால் தனது வாழ்வாதாரம் அதுதான் என்று கூறினார். மேலும், அடுத்தடுத்து தொடரவிருக்கின்ற அகழாய்வுகளில் தனது நிலங்களை தொல்லியல்துறை பயன்படுத்திக்கொள்ள பூரண ஒத்துழைப்பை அளிப்பதாகவும் முருகேசன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: காமராஜர் நகர் இடைத்தேர்தல் - 11 முக்கிய கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்பு!