சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகாவிலுள்ள கீழடியில் தமிழ்நாடு தொல்லியல் துறையின் சார்பாக ஏழாம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வந்தன.
கீழடி அருகேயுள்ள கொந்தகை, மணலூர், அகரம் ஆகிய பகுதிகளில் இரண்டாம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் இப்பணிகள் தொடங்கி வைக்கப்பட்டன.
கரோனா பெருந்தொற்றின் காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காலகட்டத்திலும் தொய்வில்லாமல் நடைபெற்று வந்த அகழாய்வுப் பணிகள் நேற்று மாலையுடன் நிறைவு பெற்றது. தொடர்ந்து ஆவணப்படுத்தும் பணிகள் மட்டுமே நடைபெறும் எனத் தொல்லியல் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
பருவமழை காலத்தின் போது அகழாய்வு பணிகள் பாதிக்கப்படும் என்பதால் செப்டம்பர் மாதத்துடன் அப்பணிகளைத் தமிழ்நாடு தொல்லியல் துறை நிறைவு செய்வது வழக்கம். அதனடிப்படையில் தற்போது தமிழ்நாடு முழுவதும் ஏழு இடங்களில் நடைபெற்று வரும் அகழாய்வு பணிகள் நேற்றுடன் நிறைவு பெற்றன.
கீழடி மட்டுமன்றி கொந்தகை, அகரம், வடலூர் ஆகிய பகுதிகளில் அடுத்த கட்ட அகழாய்வு பணிகளைத் தொடர்வது குறித்து தமிழ்நாடு அரசு விரைவில் அறிவிக்கும் எனத் தொல்லியல் துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் - சபாநாயகர் அப்பாவு கடும் எதிர்ப்பு