திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த முருகானந்தம் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அதில், "ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட சத்திரப்பட்டி கிராமத்தில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் மோசடி நடைபெற்றுள்ளது. குறிப்பாக, 2017ஆம் ஆண்டு முதல் 2020 வரையில் நடைபெற்ற மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பில் ஊழல் நடைபெற்றுள்ளது. 2017 முதல் 2020ஆம் ஆண்டு வரையிலான சமூக தணிக்கை அறிக்கை, மத்திய அரசு மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
அதில் குறிப்பிட்ட அளவை விட குறைவான இடங்களிலேயே வேலை நடைபெற்றிருப்பது தெரியவந்துள்ளது. மேலும், மகாத்மா காந்தி ஊரக வேலைகளில், பணி செய்யாதவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு உடந்தையாக அலுவலர்கள் இருந்துள்ளனர். இது குறித்து மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் 2005 பிரிவு 25 சட்ட விதிகளின்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு, ஒவ்வொரு பகுதியின் நலனுக்காக மேற்கொள்ளப்படும் பணிகளில் அப்பகுதி மக்களும் வேலை வாய்ப்பை பெறும் வகையில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் உருவாக்கப்பட்டாலும், அதில் பல்வேறு மோசடிகள் நடைபெறுவதாக தொடர்ந்து புகார்கள் எழுகின்றன. இயந்திரங்களை பயன்படுத்தி சில நிமிடங்களில் முடிக்க வேண்டிய வேலைகள், ஏன் மனிதர்கள் மூலம் செய்யப்படுகின்றன? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இது தொடர்பாக தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நவம்பர் 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.