மதுரை: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்யன், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அதில், "தமிழ்நாடு ஆசிரியர்களின் கூட்டு நடவடிக்கை கவுன்சில் நிறுவனங்கள் மற்றும் அரசு ஊழியர் அமைப்பு (JACTTO- GEO) 10.02.2016 முதல் 19.02.2016, 22.08.2017, 07.09.2017 முதல் 15.09.2017 மற்றும் 22.01.2019 முதல் 30.01.2019 பல்வேறு கோரிக்கைகள் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தற்போது, 2021 பிப்ரவரி 2ஆம் தேதி வெளியிடப்பட்ட அரசாணையின்படி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது பதியப்பட்ட வழக்குகள், ஒழுங்கு நடவடிக்கைகள் ஆகியவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதே போல் 2021 அக்டோபர் 13ஆம் தேதி வெளியிடப்பட்ட அரசாணையின் படி 2016, 2017 மற்றும் 2019 ஆண்டுகளில் போராட்டத்தில் ஈடுபட்ட நாள்கள், இடைக்கால பணிநீக்கம் ஆகியவை வேலை நாள்களாக எடுத்துக் கொள்ளப்படும்" எனக் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு விதிமுறைகளை மீறி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர், உயர்நீதிமன்றம் போராட்டம் நடத்த இடைக்கால தடை விதித்த போதும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் மூலம் மாணவர்களின் கல்வி முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, 2016, 2017 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு (JACTTO - GEO) ஆதரவாக 2 பிப்ரவரி 2021, 13 அக்டோபர் 2021 ஆகிய தேதிகளில் பிறப்பிக்கப்பட்ட அரசாணைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும். அதே போல் இந்த இரண்டு அரசாணையும் ரத்து செய்ய உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு இன்று நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, வேல்முருகன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் அரசின் கொள்கை ரீதியான முடிவில் நீதிமன்றம் எவ்வாறு தலையிட முடியும் எனக் கேள்வி எழுப்பி வழக்கு குறித்து JACTTO-GEO வுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கு விசாரணை 4 வாரத்திற்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: தனியார் சிமெண்ட் நிறுவனத்தின் மீது நடிகை சினேகா மோசடி புகார்!